Published : 26 Jul 2024 03:33 PM
Last Updated : 26 Jul 2024 03:33 PM
உதகை: இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற போது ஜான் மெக்ஐவர் என்ற ஆங்கிலேயரால் 200 ஆண்டுகளுக்கு முன்பு மலைகளின் அரசி உதகை தோற்றுவிக்கப்பட்டது. அப்போது, நகரின் நலத்தை காக்க உருவாக்கிய இரண்டு அம்சங்களின் ஒன்று அரசு தாவரவியல் பூங்கா, மற்றொன்று குதிரை பந்தய மைதானம்.
சுமார் 55 ஏக்கரில் தாவரவியல் பூங்காவும்,சுமார் 53 ஏக்கரில் குதிரை பந்தய மைதானமும் உருவாக்கப்பட்டது. இவை தான் நகரின் நுரையீரல்.நகரின் சுவாச இயந்திரங்கள். இதை கருத்தில் கொண்டு, இரண்டையும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் தோற்றுவித்தனர். தற்போது குதிரை பந்தய மைதானத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தியுள்ள நிலையில்,நகரின் சுற்றுச்சூழல் சமன்பாட்டுக்கு பெரிதும் உதவும் குதிரை பந்தய மைதானத்தின் நிலப் பயன்பாட்டை மாற்றிவிடுவார்களோ என்ற அச்சம் உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், இந்த மைதானத்தை பாதுகாக்க ஆர்வலர்கள் ஒன்று திரண்டுள்ளனர். வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி, கருத்து பரிமாற்றம் நடத்தி வருகின்றனர். மேலும், இதை மக்கள்இயக்கமாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். Save the Ooty Race Course என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர். இ துதொடர்பாக இந்த இயக்கத்தை முன்னெடுத்து வரும் என்.கே.பெருமாள், ராதாகிருஷ்ணன்தர்மலிங்கம் ஆகியோர் கூறியதாவது: மலைகளின் ராணியான உதகை ஒரு முக்கியமான கட்டத்தை எதிர்கொள்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க உதகை ரேஸ்கோர்ஸ், அவசர வளர்ச்சியின் அச்சுறுத்தலில் உள்ளது. இந்த அணுகுமுறை, நீண்ட கால நிலைத்தன்மையைவிட குறுகிய கால ஆதாயத்துக்கு முன்னுரிமை அளிக்கிறது.
உதகையின் தனித்துவமான சுற்றுச்சூழலுக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும். மைதானத்தில் பரந்து விரிந்துகிடக்கும் சதுப்பு நிலம் ஈடுசெய்ய முடியாத இயற்கை பொக்கிஷம். இந்த சதுப்பு நிலத்தின் மீது நடைபாதையை அமைப்பது மற்றும் பிற பயன்பாடுகள் உதகையின் மூச்சை அடக்குவதற்கு சமம். சதுப்பு நிலங்கள் இயற்கை வடிகட்டிகளாக செயல்படுகின்றன, தண்ணீரை சுத்திகரிக்கின்றன மற்றும் வெள்ளத்தை தடுக்கின்றன. பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு முக்கியமான வாழ்விடங்களாக, சுற்றுச்சூழல் சமநிலைக்கு பங்களிக்கின்றன.
இந்த சதுப்பு நிலத்தை அழிப்பது, சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, உதகையின் சாராம்சத்துக்கும் கேடு விளைவிக்கும். உதகைஅதன் இயற்கை அழகு மற்றும்அழகிய சூழலால் செழித்து வளர்கிறது. கட்டுப்பாடற்ற கட்டுமானத் திட்டங்கள் இந்த அடித்தளத்தையே சிதைக்க மட்டுமே உதவுகின்றன. இறுதியில், உதகையின் சுற்றுலா தலம் என்ற ஈர்ப்பைக் குறைக்கிறது.வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் இடையே இணக்கமான சமநிலையை ஏற்படுத்துவதில் தீர்வு உள்ளது.
‘சேவ் ஊட்டி ரேஸ்கோர்ஸ் பிரச்சாரம்’ என்பது காலத்தின் தேவை. உதகை குதிரை பந்தய மைதானத்தை காப்பாற்றுவது என்பது ஒரு நிலத்தை பாதுகாப்பது மட்டுமல்ல; வருங்கால சந்ததியினர் இன்னும் புதியகாற்றை சுவாசிக்க பாதுகாப்பதாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் டி.வேணுகோபால் கூறும்போது, ‘‘127 ஆண்டுகளுக்கு முன்பு சலீவன் உருவாக்கிய 2 மைல் நீளமுள்ள உதகை ஏரி, பாதி வடிகட்டப்பட்டு இறுதியில் தற்போதைய குதிரை பந்தய மைதானம் உருவாக்கத்துக்கு வழிவகுத்தது. 1830-ல் உதகை ஏரி உடைந்தபோது, மக்கள்ஏரியை கடக்க ஏதுவாக மண் திட்டு கட்டப்பட்டது.
அணைக்கட்டு கட்டப்பட்ட பின்னர், ஏரியின் மேல் பகுதி வடிந்து, சதுப்பு நிலமாகவும், பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் மாறியது. இந்திய அரசு 1897-1898-ம் ஆண்டில் திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட 4-வது படைப்பிரிவின் உதவியுடன் உதகை ஏரி சீரமைப்பு திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஏரியின் ஒரு பாதியை நிரப்பும் திட்டத்தின் நோக்கம், குதிரை பந்தய மைதானம், கிரிக்கெட் மற்றும் போலோ மைதானங்களுடன் கூடிய பெரிய அளவிலான மைதானத்தை அமைப்பது என்பதாகும். இதற்கு மொத்த செலவு ரூ.60,821 இந்திய அரசால் பூர்த்தி செய்யப்பட்டது. ஜூலை 1897-ல் பணிகள் தொடங்கி,1898 அக்டோபர் 1-ம் தேதி நிறைவடைந்தது.
பணியில் ஈடுபட்ட படைப் பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மழை நாட்களைத் தவிர, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என 364 நாட்கள் வேலை செய்தனர். அவர்களுக்கு மாதம் ரூ.9 ஊதியம் வழங்கப்பட்டது. அவர்கள், தற்போதைய சந்தைக்கு அருகில் தங்க வைக்கப்பட்டனர். இப்பணியை லெப்டினென்ட் கர்னல் ஜி.பி.ஸ்டீவன்ஸ் செயல்படுத்தினார். படைப்பிரிவின் முதுகெலும்பாக இருந்த சுபேதார்மேஜர் முஹம்மது சல்லார் ஆற்றிய சேவையை அரசு பாராட்டியது. இப்பணி நிறைவடைந்த பின்னரே, 52 ஏக்கர் நிலப்பரப்புள்ள குதிரை பந்தய மைதானம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...