Last Updated : 20 Jul, 2024 05:47 PM

 

Published : 20 Jul 2024 05:47 PM
Last Updated : 20 Jul 2024 05:47 PM

வேணாட்டு அரசர்களின் தலைநகரமாக விளங்கிய இரணியல் அரண்மனை புனரமைப்பு பணி 70% நிறைவு

குமரி மாவட்டம் இரண்மனை அரண்மனை புனரமைப்பு பணிகளை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகர்கோவில்: இரணியல் அரண்மனையை ரூ. 4.85 கோடியில் பழமை மாறாமல் புனரமைக்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்துடன் இணைந்து இருந்தபோது, குறிப்பிட்ட சில ஆண்டுகள் வேணாட்டரசர்களின் தலைநகராக இரணியல் விளங்கியது. பத்மநாபபுரம் தலைநகரான பின்னர், இரணியல் இரண்டாம் தலைநகரமாக இருந்தது.

அப்போது கட்டப்பட்ட அரண்மனை இரணியல் மார்த்தாண்டேஸ்வரர் கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இக்கோயில் வஞ்சி மார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்டதாகும். கி.பி.12-ம் நூற்றாண்டில் இருந்து இப்பகுதியை அரசாண்ட வேணாட்டரசர்களின் முக்கிய அரண்மனையாக இது விளங்கியது. இது பத்மநாபபுரம் அரண்மனைக்கு முன்னரே இரு அடுக்குகளாக கட்டப்பட்ட அரண்மனையாகும்.

இரணியல் அரண்மனையில் அரசர்கள் ஓய்வெடுக்கும் அறை, அதிகாரிகளும் பிறரும் தங்குமிடம் என்றும் இரு பகுதிகளைக் கொண்டது. 2.5 ஏக்கர் பரப்பில் அமைந்த வளாகத்தில் இக்கட்டிடங்கள் உள்ளன. பெரிய அரண்மனைக் கட்டிடம் அருகே அரசக்குடும்பத்தினர் குளிக்க ஒரு சிறு குளமும் உண்டு.

பெரிய அரண்மனையின் முன்வாசல் வேலைப்பாடுடையது. இதன் கல்தூணில் செண்டு ஏந்திய சாஸ்தாவின் சிற்பம் உள்ளது. இரு தலைகள் கொண்ட கண்டபேரண்டபட்சி ஒன்று யானைகளை கால்களில் தூக்கிச் செல்லும் அரிய சிற்பமும் உள்ளது. அரண்மனை உள்பகுதியில் நாலுகட்டு வீடு, நடுவில் சிறு முற்றம், 4 சுற்றுகட்டுகள், பக்கவாட்டில் 3 அறைகள், சமையலறை ஆகியவை அமைந்துள்ளன. அரண்மனையைச் சுற்றிலும் அழகிய தாழ்வாரம் உள்ளது. சுற்றுக்கட்டு பகுதிகளில் எண்பட்டைக் கொண்ட கல் தூண்கள் உள்ளன. மேல் கூரை ஓடுவேய்ந்தது. இந்த ஓட்டின் நீள அகலமும், கட்டுமானச் செங்கலின் அமைப்பும் இதன் பழமையைப் பறைசாற்றுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள் முதல் இரணியல் அரண்மனை பராமரிப்பின்றி போனது. இங்கிருந்த அழகிய மர சிற்பங்களும், கற்சிலைகளும், விலை உயர்ந்த மரத்தூண்களும் சமுகவிரோதிகளால் கொள்ளை அடிக்கப்பட்டன. பொலிவிழந்து காண்ப்பட்ட இரணியல் அரண்மனையை, பழமை மாறாமல் புனரமைத்து தர வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று, இரணியல் அரண்மனை தமிழ்நாடு அரசு மானியம் நிதியின் கீழ் ரூ.3.85 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புனரமைக்கப்படும் என, 2013-2014-ம் ஆண்டில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பணி ஆணை வழங்கப்பட்டு 30.01.2020 அன்று பூமி பூஜை நடைபெற்றது. 2020 டிசம்பரில் பணி தொடங்கப்பட்டது. இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் தற்போது 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகளை நேற்று பார்வையிட்டார். மீதம் உள்ள 30 சதவீத பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இரணியல் அரண்மனை கொண்டுவரப்படும் என அவர் கூறினார். மேலும் அரண்மனையின் அருகாமையில் உள்ள திருக்கோவிலில் ரூ.14.5 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணியையும் பார்வையிட்டார். ஆய்வில் இந்து சமய அறநிலையைத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், உதவி செயற் பொறியாளர் ராஜகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x