Last Updated : 20 Jul, 2024 04:46 PM

 

Published : 20 Jul 2024 04:46 PM
Last Updated : 20 Jul 2024 04:46 PM

பள்ளிக் குழந்தைகளுக்கு ‘ஆரோக்கிய’ பழக்கங்களை வழக்கமாக்குவது எப்படி?

கோவை: இவ்வுலகில் நோயின்றி வாழ வேண்டுமானால் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வது அவசியமாகும். நல்ல பழக்க வழக்கம் என்பது சுத்தத்தை பேணிக் காப்பதே ஆகும். ஆரோக்கியமாய் வாழ்வதற்குச் சுத்தமாய் இருப்பது அவசியமாகும். பொதுவாய், சுத்தமாய் இருத்தல் என்பது ஒருவர் தன் உடம்பை அதாவது தோல் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளான முடி, கால், கை, நகங்கள் மற்றும் வாயையும் சுத்தமாக வைத்திருப்பதாகும். குழந்தைப் பருவத்தில் உடம்பை எப்படிச் சுத்தம் செய்வது என்று அறியாததாலேயே பெரும்பாலான நோய்கள் வருகின்றன.

பள்ளிக் குழந்தைகளுக்கான சுகாதாரப் பழக்க வழக்கங்கள் குறித்து தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார் குழந்தைகள் மருத்துவர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: நல்ல ஆரோக்கியமான வாழ்வுக்குச் சுத்தமாய் இருத்தல் அவசியம். சுத்தமாகவும், நல்ல தோற்றத்துடனும் இருப்பதே நமது கலாச்சாரம். தினமும் பல் துலக்குவதால், பல் சொத்தை ஈறுகளில் ரத்தக் கசிவு, வாய் துர்நாற்றம் இல்லாமல் ஆரோக்கியமாய் இருக்க முடியும்.

தினமும் குளிப்பதால் தோலின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். ஏனெனில் தோல்தான் நமது உடல் தட்ப வெப்பநிலையைச் சீராக்குகிறது, நோய்க்கிருமிகள் உடலினுள் செல்லாமல் தடுக்கிறது. தினமும் தலையைச் சுத்தமாய் வைத்திருப்பதாலும், வாருவதாலும், வாரத்தில் இரண்டு முறையாவது தலைக்கு குளிப்பதால், பேன், பொடுகு இல்லாமல் இருக்கலாம். நகங்களை வெட்டி சுத்தமாக வைப்பதால், அவற்றின் மூலம் பரவும் நோய்களான மஞ்சள் காமாலை, டைபாய்டு, இளம்பிள்ளை வாதம், குடற்புழு ஆகிய நோய்களைத் தவிர்க்க முடியும்.

கைகளைநன்கு கழுவுவதால் வாய் வழியாகப் பரவும்நோய்களைத் தவிர்க்கமுடியும். ஒவ்வொருமுறையும் சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிப்பதால் உணவுத் துணுக்குகள் பற்களின் இடையில் தங்குவதைத்தடுக்க முடியும். பெரும்பாலும் உணவுத் துணுக்குகள்பற்களின் இடையில் தேங்குவதாலேயே நோய்க்கிருமிகள் வளர்கின்றன.

மருத்துவர் ராஜேந்திரன்

வெளியில் சுகாதாரமின்றி ஈ மொய்த்த பண்டங்களை வாங்கி உண்ணாமல் இருப்பதன் மூலம்ஈக்கள் வழியாக நோய்கள் பரவுவதைத் தவிர்க்க முடிகிறது. காலில் செருப்பு அணிவதன் மூலம் சிறு காயங்கள் ஏற்படுவதில் இருந்தும், கால் வழியாகக் குடற்புழு நோய் பரவுவதையும் தவிர்க்கலாம். என்றார்.

பல் துலக்கும் முறை: காலையில் எழுந்தவுடனும் இரவில் படுக்கப் போகும் முன்னும் பல் துலக்க வேண்டும். முதலில் பல் குச்சியை (பிரஷ்) நனைக்கவும். பிறகு சிறிதளவு பற்பசையை (டூத்பேஸ்ட்) எடுக்கவும். முதலில் பல்லின் வெளிப்புறத்தை நன்கு அழுத்திச் சுழற்சி முறையால் மேலும், கீழும் தேய்க்க வேண்டும். இதேபோல் பல்லின் உட்புறத்தையும் தேய்க்க வேண்டும்.

உணவு உண்ணும்போது: சாப்பிடப் போகும் முன் நன்கு கைகளைக் கழுவ வேண்டும். தட்டைச் சுற்றி உணவைச் சிந்தாமல் சாப்பிட வேண்டும். கீழே விழுந்தவற்றையும், மீதமானவற்றையும் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். உணவு உண்ட பின் கைகளையும், வாயையும் நன்கு கழுவ வேண்டும். கொதித்து ஆறவைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்.

கை கழுவும் முறை: முடிந்தவரை மிதமான வெந்நீரில், நன்றாக சோப்புப் போட்டு 30 விநாடி வரை கழுவ வேண்டும். முக்கியமாக விரல் இடுக்குகளிலும், நகத்தைச் சுற்றியும் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். தேய்த்த பின் நன்கு தண்ணீர் ஊற்றி மேலிருந்து கீழ் நோக்கிக் கழுவ வேண்டும். கழுவிய பின் நல்ல சுத்தமான துணியால் கையைத் துடைக்க வேண்டும்.

கை கழுவுவது எப்போது? - சாப்பிடப் போகும் முன், செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பின், மைதானத்தில் விளையாடிய பின், மூக்கை சிந்தியவுடன், கழிவறையை உபயோகித்த பின்னர் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

கால் பராமரிப்பு: எப்போதும் செருப்பு அணிய வேண்டும். முக்கியமாக கழிவறைக்குச் செல்லும்போது அணிய வேண்டும். இரவில் படுக்கப்போகும் முன் கால்களைக் கழுவி விட்டுச் சுத்தமான துணியால் துடைத்தபின் படுக்க வேண்டும்.

நகம் வெட்டும் முறை: 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை நகம் வெட்ட வேண்டும். நகம் வெட்டும் முன் ஒரு பேப்பரை விரித்துக்கொள்ள வேண்டும். அதன்மீது கைகளையோ, கால்களையோ வைத்து நகவெட்டி மூலம் நகம் வெட்ட வேண்டும். நகம் வெட்டியவுடன் பேப்பரில் உள்ள நகத் துணுக்குகளை அப்படியே பேப்பருடன் சுற்றிக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். பின் நன்கு சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x