Published : 20 Jul 2024 12:15 AM
Last Updated : 20 Jul 2024 12:15 AM
சென்னை: காதில் பேண்டேஜுடன் அருகருகே நாற்காலியில் மகாராஜா திரைப்படத்தின் விஜய் சேதுபதியும், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் அமர்ந்திருப்பது போன்ற கார்ட்டூன் கவனம் ஈர்த்து வருகிறது.
இதனை MAli என்கிற கார்ட்டூனிஸ்ட் வரைந்துள்ளார். ‘இரு காது பேண்டேஜ்கள் சொல்லும் கதை’ என தான் வரைந்த கார்ட்டூனுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இது சமூக வலைதள பயனர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த மாதம் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் வெளியானது. தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இந்தப் படம் வெளியாகி உள்ளது. பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்தப் படம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் தனது இடது காதில் பேண்டேஜ் அணிந்திருப்பார் விஜய் சேதுபதி.
அதே நேரத்தில் கடந்த 13-ம் தேதி அன்று அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
வலது காதில் குண்டு உரசி பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். துப்பாக்கிச் சூடு நடத்திய தாமஸ் மேத்யூவை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த நிலையில் தனது வலது காதில் பேண்டேஜ் அணிந்து கொண்டு அவர் தேர்தல் தொடர்பாக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குடியரசுக் கட்சியினர் மற்றும் ட்ரம்பின் அபிமானிகள் தங்களது வலது காதில் பேண்டேஜ் அணிந்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், காதில் பேண்டேஜ் அணிந்துள்ள ‘மகாராஜா’ விஜய் சேதுபதி மற்றும் ட்ரம்ப் அருகருகே நாற்காலியில் அமர்ந்து இருப்பது மாதிரியான கார்ட்டூனை MAli வரைந்துள்ளார். அவரது ரீல் மற்றும் ரியல் கார்ட்டூன் இப்போது கவனம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT