Last Updated : 18 Jul, 2024 07:28 PM

1  

Published : 18 Jul 2024 07:28 PM
Last Updated : 18 Jul 2024 07:28 PM

காவல் துறையில் வாரிசு வேலைக்காக 10 ஆண்டாக காத்திருக்கும் தஞ்சை மாற்றுத் திறனாளி பெண்!

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பொதுமக்களுக்கு மனுக்கள் எழுதி கொடுத்து வரும் மாற்றுத்திறனாளி சத்யா |  படங்கள்: ஆர்.வெங்கடேஷ்.

தஞ்சாவூர்: காவல் துறையில் பணியாற்றிய தாய் - தந்தையரின் வாரிசு வேலைக்காக 10 ஆண்டுகளாக திருமணமும் செய்து கொள்ளாமல் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அரசு பணிக்காக காத்திருக்கிறார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சத்யா (39). இவரது தந்தை பாலசுப்பிரமணியன். இவர் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றியபோது 1986-ம் ஆண்டு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி கற்பகத்துக்கு வாரிசு அடிப்படையிலும், கல்வி தகுதியின் கீழும் கோவை நகர காவல் நிலையத்தில் முழு நேர தூய்மை பணியாளராக 1990-ம் ஆண்டு வேலை கிடைத்தது. பின்னர் அங்கிருந்து திருவாரூர் நகர காவல் நிலையத்துக்கு பணியிடமாறுதல் வாங்கி வந்தார்.

சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு கற்பகம் பணியில் இருந்தபோது இறந்தார். இதனால் தாயும் தந்தையும் இறந்ததால் சத்யா நிற்கதியானார். அதன் பிறகு பெற்றோர் பணியாற்றிய காவல் துறையில் தனக்கு வாரிசு அடிப்படையிலே ஏதாவது ஒரு அரசு பணி வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 13.1.2014 ஆம் ஆண்டு மனு கொடுத்தார்.

ஆனால் இதுவரை அவருக்கு வாரிசு அடிப்படையில் பணி ஏதும் வழங்கப்படவில்லை. பெண் பிள்ளைகளுக்கு வாரிசு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றால் திருமணம் செய்திருக்க கூடாது என்ற விதியினால் இவர் கடந்த 10 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் அரசு பணிக்காக காத்திருக்கிறார். இதுகுறித்து சத்யா கூறுகையில்: “எனக்கு ஒன்றரை வயது இருக்கும் போது மூளை காய்ச்சலால் எனது கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன்.

அதன் பிறகு வெகு சிரமத்துக்கு இடையே எம்.ஏ., தமிழ் பட்டப்படிப்பு படித்துள்ளேன்.எனது உடன் பிறந்த சகோதரி ஒருவர் எனது அம்மா இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டு வெளியூரில் வசித்து வருகிறார். தற்போது நான் மட்டுமே தனியாக வசித்து வருகிறேன்.எனக்கு கருணை அடிப்படையில் அரசு பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையினால் கடந்த 10 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் காத்திருக்கிறேன்.

பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித தீர்வும் எனக்கு கிடைக்கவில்லை.நான் வாடகை வீட்டில் வசித்து வருவதால் வாடகை மற்றும் இதர செலவுக்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வாரந்தோறும் திங்கள் கிழமையில் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுத்து அவர்கள் வழங்கும் சொற்ப பணத்தை கொண்டு வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறேன். எனக்கு காவல்துறை மட்டுமல்லாமல் அரசின் ஏதோ ஒரு துறையில் எனக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும்,” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x