Published : 18 Jul 2024 06:50 PM
Last Updated : 18 Jul 2024 06:50 PM

“கரோனா காலத்தில் என் தாயை காப்பாற்றினார்...” - கும்பகோணம் அரசு மருத்துவரை பாராட்டி நெகிழ்ந்த ஓட்டுநர்

கும்பகோணம்: ஓட்டுநர் ஒருவர் கரோனா காலத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு சிகிச்சையளித்துக் காப்பாற்றிய அரசு மருத்துவருக்கு நடந்த பாராட்டு விழாவில், அதை நினைவுகூர்ந்து கண்ணீர்மல்க நன்றி தெரிவித்த நெகிழ்வான சம்பவம் கும்பகோணத்தில் நடந்தது.

திருவாரூர் மாவட்டம், அடவன்குடியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட கரோனா தொற்று காரணமாக முழு அடைப்பு அமலில் இருந்தது. அப்போது, கண்ணனின் தாயாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்டதால், பல்வேறு தனியார் மருத்துவமனைகளை தொடர்புகொண்டு தாயாரை சிகிச்சைக்கு அனுமதிக்க உதவி கேட்டார். அதற்கு அவர்கள், பல லட்சம் ரூபாய் செலவாகும் எனக் கூறினர்.

ஆனால், தன்னிடம் போதிய பணம் இல்லாமல் தவித்த கண்ணன், தனது நண்பரின் மூலம், கும்பகோணம் அரசு மருத்துவமனை, மருத்துவ நிலைய அலுவலராக பணியாற்றிய மருத்துவர் உ.பிரபாகரனை தொடர்பு கொண்டார். உடனடியாக, மருத்துவர் பிரபாகரன், கண்ணனின் தாயாரை, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தார். அதனால் கண்ணனின் தாயார் பூரண குணம் அடைந்தார்.

இதையடுத்து பிரபாகரனுக்கு கண்ணீர் மல்க அப்போது நன்றி தெரிவித்த ஓட்டுநர் கண்ணன், பொதுவெளியில் பலபேர் முன்னிலையில் இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு மீண்டும் ஒருமுறை மருத்துவர் பிரபாகரனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என காத்திருந்தார். இந்த நிலையில், அண்மையில் தமிழக அரசின் சிறந்த மருத்துவர் விருது பெற்றார் மருத்துவர் உ.பிரகாரன். அதற்காக அவருக்கு கும்பகோணத்தில் அனைத்துக் கட்சி சார்பில் பாராட்டு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதனையறிந்த, ஓட்டுநர் கண்ணன் தனது குடும்பத்துடன் பாராட்டு விழாவுக்குச் சென்றார்.

அப்போது பாராட்டு விழா மேடை ஏறி பேசிய கண்ணன், தனது தாயின் உயிரை காப்பாற்ற மற்ற மருத்துவமனைகளில் லட்சக் கணக்கில் பணம் கேட்ட சமயத்தில் பைசா செலவில்லாமல் மருத்துவர் பிரபாகரன், தனது தாயாரைக் காப்பாற்றியதையும், கரோனா தொற்று காலத்தில் அவர் முகம் சுளிக்காமல் அன்பாக பேசி சிகிச்சையளித்ததையும் நினைவுகூர்ந்து கண்ணீர் கசிய மீண்டும் ஒருமுறை மருத்துவர் பிரபாகரனுக்கு நன்றி தெரிவித்தார். இதைக்கேட்ட அனைவரும் மருத்துவர் பிரபாகரனின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக பலமான கரவொலி எழுப்பி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x