Last Updated : 15 Jul, 2024 05:08 PM

 

Published : 15 Jul 2024 05:08 PM
Last Updated : 15 Jul 2024 05:08 PM

கோவை காந்திபுரம் செம்மொழி பூங்காவில் அமைகிறது கலைஞர் நூலகம்!

கோவை நஞ்சப்பா சாலையில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகள். | படம்: ஜெ.மனோகரன் |

கோவை: கோவை காந்திபுரத்தில் மத்திய சிறைக்குச் சொந்தமான இடத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் ‘கலைஞர் நூலகம்’ அமையும் என நூலக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை நகரம் இரண்டாம் நிலைநகரங்களில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜவுளி, மோட்டார் பம்ப்செட், ஜவுளி இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, ஐடி நிறுவனங்கள் என பன்முகதொழில்துறைகளை கொண்டதாகவும், சென்னைக்கு அடுத்து தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் சிறப்பு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வலுவாக உள்ள நகரமாகவும் கோவை விளங்குகிறது.

இதனிடையே, சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே பெரிய நூலகமாக கட்டப்பட்டு மாணவர்களின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து சர்வதேச தரத்தில் கடந்த 2023-ம் ஆண்டில் மதுரையில் ரூ.215 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது. அதேபோல கல்வி, மருத்துவத்துறையில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வரும் கோவை நகரில் சர்வதேச தரத்தில் நூலகம் அமைய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற 2024 - 2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கோவையில் பிரமாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டார். இந்த நூலகத்துக்கு ரேஸ்கோர்ஸ் மற்றும் காந்திபுரம் மத்திய சிறை துறைக்கு சொந்தமான இடம் ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து, மாவட்ட நூலகத்துறை அதிகாரிகள் கூறும்போது, “காந்திபுரத்தில் சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று வருகின்றன. செம்மொழி பூங்கா அருகே 7 ஏக்கர்பரப்பளவில் ‘கலைஞர் நூலகம்’அமைக்க இடம் தேர்வு செய்துஅரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றனர்.

வரும் 2026 ஜனவரியில் கோவையில் கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ள நிலையில், நூலகம்மற்றும் அறிவியல் மையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, நூலக வாசகர் வட்ட தலைவர் க.லெனின்பாரதி கூறும்போது, “பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் நிறைந்த கோவை நகரில் அறிவியல் சிந்தனையையும், அறிவியல் மனப்பான்மையையும், வானியல் அறிவையும், வாசிப்பு பழக்கத்தையும் வளர்த்தெடுக்கும் வகையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைவது அறிவுசார் சமூகத்துக்கு மிகப்பெரிய நன்கொடை. கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் சர்வதேச தரத்துக்கு இணையாக 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் கோவையில் உருப்பெறும் என்று நம்புகிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x