Published : 05 Jul 2024 05:42 PM
Last Updated : 05 Jul 2024 05:42 PM

குழந்தைகளுக்கு அதிகரிக்கும் கிட்டப்பார்வை: மொபைல் போன்களின் ஸ்கிரீன் தூரம் ‘வார்னிங்’!

பிரதிநிதித்துவப் படம்

மதுரை: குழந்தைகள், இளைஞர்கள் பயன்படுத்தும் மொபைல் போன்கள் தானாக ஆஃப் ஆகும் செயலி கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் விருப்பம் தெரிவித்தது. நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், சீனா போன்ற நாடுகளில் ஏற்கெனவே குழந்தைகள் மொபைல் போன்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. இந்தியாவில் தற்போதைக்கு கட்டுப்பாடுகள் இல்லை. இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் பிள்ளைகள் மொபைல் போன்களை கட்டுப்பாடின்றி அல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் குழந்தைகளும் இளைஞர்களும் மணிக்கணக்காய் மொபைல் போனில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இது ஆரோக்கியமானது கிடையாது என்று அவர்களுக்கும் தெரியும்தான். ஆனால், சமூக வலைதளங்களில் இருந்து மீளமுடியாமல் அவர்கள் தத்தளிக்கிறார்கள். மதுவின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காக எப்படி மறுவாழ்வு மையங்கள் இருக்கின்றனவோ அதைப்போன்று டிஜிட்டல் பயன்பாட்டு போதையிலிருந்து விடுபடுவதற்காக மறுவாழ்வு மையங்கள் வெளிநாடுகளில் இருக்கின்றன.

இந்தியாவிலும் இதைப்போன்ற நிலையம் - ஷட் கிளினிக் ( SHUT- Service for Healthy Use of Technology ) பெங்களூரு நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் துவக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து இதன் தீவிரத்தை உணரலாம். இருப்பினும் குழந்தைகளிடையே மொபைல் போன் பயன்பாடு கட்டுப்பாடுகள் குறித்த நடவடிக்கைகள் இந்தியாவில் இதுவரையில் இல்லை.

இது குறித்து நம்மிடம் பேசிய தேசிய கண் மருத்துவ சங்க முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளரும், கண்மருத்துவ உதவியாளருமான (வி.ஓ) மு.வீராசாமி, “ஒருவர் சராசரியாக நாளொன்றுக்கு 6-லிருந்து 10 மணிநேரம் வரை மொபைல் போனில் மூழ்கி இருப்பதாக சொல்கிறார்கள். காலையில் இருந்து இரவு வரை 150 முறை செல்போனைப் பார்க்கிறார்களாம். இது இப்படியிருக்க, இன்னொருபுறம் அதிகப்படியான மொபைல் போன் பயன்பாட்டினால் பிள்ளைகளிடையே கிட்டப்பார்வை குறைபாடும் வேகமாக அதிகரித்து வருகிறது என்பதையும் கவனித்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் குறைபாட்டினை கட்டுப்படுத்த ஐபோனில் தற்போது ஒரு புதிய வசதி செய்திருக்கிறார்கள். வழக்கமாக புத்தகம், நாளிதழ் போன்றவற்றை கையில் வைத்து பார்க்கும் தூரத்தைவிட செல்போனை கண்ணுக்கு மிக அருகில் வைத்துத்தான் பார்க்கிறோம். தொடர்ச்சியாக மொபைல் போனை கண்ணுக்கு அருகில் வைத்து நீண்டநேரம் பார்ப்பது கண்ணுக்கு களைப்பைத் தருவதுடன் நாளடைவில் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுவதற்கும் காரணமாகிவிடுகிறது. செல்போனை 20-25 செ.மீட்டருக்குள் வைத்துப்பார்க்கும்போது கிட்டப்பார்வை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.

அமெரிக்க ஆப்டோமெட்ரி கழகம், குழந்தைகள் செல்போன், டேப்லெட் பிசி போன்றவற்றை கண்ணிலிருந்து 33 சென்டி மீட்டரில் இருந்து 50 சென்டி மீட்டருக்குள் வைத்து பார்க்கும்படி அறிவுறுத்துகிறது. இந்த இடைவெளி ஒரு அடிக்கும் கூடுதலாக, அதாவது முழங்கை அளவுக்கும் கூடுதலாக இருக்க வேண்டும்.

அமெரிக்க ஆப்டோமெட்ரி கழகத்தின் வழிமுறைகளை பின்பற்றி தற்போது ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மற்றும் ஐபேடில் வெளியிட்டுள்ள IOS 17 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், திரை தூரத்திற்கான ( Screen Distance ) புதிய அம்சம் இடம்பெற்றுள்ளது. அதில் உள்ள ‘ட்ரூ டெப்த்’ கேமராவானது நாம் கண்ணிலிருந்து எவ்வளவு தொலைவில் போனை வைத்திருக்கிறோம் என்பதை கணக்கிடுகிறது. 20 சென்டி மீட்டருக்கும் குறைவாக செல்போனை வைத்திருக்கும்போது போனை நகர்த்த அறிவுறுத்துகிறது.

இந்த புதிய அம்சம் சரியான பார்க்கும் தூரத்தை பராமரிக்க குழந்தைகளிடையே பழக்கப்படுத்த உதவுகிறது. 20 சென்டி மீட்டருக்கும் குறைவான தூரத்தில் போனை வைத்திருக்கும்போது செல்போன் திரையில் அறிவிப்பு செய்து திரையை மறைக்கச் செய்கிறது. நீங்கள் போனை மிகக் குறைவான தூரத்தில் வைத்திருக்கிறீர்கள், இன்னும் தள்ளி வைத்து பார்ப்பது உங்கள் கண்களுக்கு நல்லது என்று நினைவூட்டுகிறது.

போனை சரியான தூரத்திற்கு தள்ளி வைத்தவுடன் திரையில் தொடருவதற்குரிய பொத்தான் (Continue button) தோன்றும். இதை அழுத்தியவுடன் தொடர்ந்து நாம் மொபைலை பார்க்க அனுமதிக்கிறது. இது ஓர் ஆரோக்கியமான கண்டுபிடிப்பே. இதில் உள்ள மிக முக்கியமான செய்தி, போனை குறிப்பிட்ட தொலைவுக்கு தள்ளி வைக்காமல் தொடர்ந்து போனை பார்க்க அனுமதிக்காது என்பதுதான்.

அனைவராலும் ஆப்பிள் சாதனங்களை வாங்க முடியுமா? குழந்தைகளின் கண்பார்வை நலன் கருதி இந்த வசதியை எளிமைப்படுத்தி அனைத்து வகை செல்போன்களிலும் ஏற்படுத்துவது குறித்து செல்போன் தயாரிப்பாளர்கள் கவனிக்க வேண்டும்.

இப்படி ஒரு வசதி ஏற்கெனவே ஒரு செல்போனில் வந்திருக்கும்போது உயர் நீதிமன்ற நீதிபதியின் விருப்பம் நிறைவேறுவதும் எளிமையான ஒன்றுதான். தொடர்ந்து நீண்ட நேரம் பார்க்கும்போது அரைமணி நேரத்துக்குப் பிறகு செல்போன் தானாக ஆஃப் ஆகிவிட்டு பின் மீண்டும் அரைமணி நேரம் கழித்தே செயல்படுமாறும் செய்யலாம். முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இது குறித்து பரிசீலினை செய்யலாம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x