Published : 05 Jul 2024 03:55 PM
Last Updated : 05 Jul 2024 03:55 PM
மதுரை: வயதாகிவிட்டாலே முதியவர்கள் பலரை ‘இனி இருந்து என்ன ஆகப் போகிறது..’ என்ற கழிவிரக்கம் சூழ்ந்துகொள்கிறது. இன்றைய வாழ்வின் நடைமுறை எதார்த்தத்தை உணர்ந்துகொள்ள தவறும் முதியவர்கள் பலர் வீடுகளிலேயே தனியறைகளில் டிவி, சாப்பாடு, தூக்கம் என முடங்கி விடுகிறார்கள். ஆனால், அரிதான சிலரோ மற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல் இருக்கும்வரை மற்றவர்களுக்கு சேவை செய்வோம் என்ற மனப்பான்மையில் சமூகப் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார்கள்.
அப்படிப்பட்ட மனிதநேயமுள்ள தன்னார்வலர்களில் ஒருவர்தான் மதுரை மாவட்டம், உலகனேரியை சேர்ந்த பாண்டியம்மாள்(65). உலகனேரி பகுதியிலுள்ள யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செடிகள், மரங்களை பராமரிக்கும் தற்காலிக ஊழியராக சுறுசுறுப்பாக வேலை பார்க்கிறார்.
இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாண விகள் படிக் கின்றனர். இவர்கள் ஒத்தக்கடை, புதுப் பட்டி, திருவா தவூர், மேலூர் வரையிலும், மாநகர் பகுதிகளான புதூர், கடச்சனேந்தல், சர்வேயர் காலனி பகுதியிலும் இருந்து இங்கு வந்து படிக்கிறார்கள். பெரும்பாலும் நகர பேருந்துகளில் செல்லும் இம்மாணவிகள், தினமும் காலை, மாலை வேளையில் பேருந்துகளை பிடிக்க முண்டியடித்து ஓடுவது என பெரும் போராட்டமாகவே இருக் கிறது. இதில் பலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். இதைப் பார்த்து வருத்த மடைந்த பாண்டியம்மாள் பள்ளி தொடங்கும் முன் காலையிலும், பள்ளி விடும் முன் மாலையிலும் பேருந்து நிறுத்தம் வந்து விடுகிறார்.
பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவிகளை பத்திரமாக ஏற்றி, இறக்கும் பணியை நாள் தவறாமல் செய்து வருகிறார். ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் அரசு பேருந்து களை கையை நீட்டி நிறுத்தி ‘எங்க ஸ்கூல் பிள்ளை களை பத்திரமாக அழைச்சுட்டு போங்க தம்பிகளா..! என ஓட்டுநர், நடத்துநர் களிடம் அன்போடு கேட்டுக் கொள் கிறார். அதே போல, படிக் கட்டில் பயணிக்கக்கூடாது.. பத்திரமா வீடு போய் சேரணும்..! என கண்டிப்புடன் அறிவுரை கூறி மாணவிகளை ஏற்றி விடுகிறார்.
இதைப் பார்த்த ஓட்டுநர்கள் இந்த பேருந்து நிறுத்தத்தில் தவறாமல் பேருந்துகளை நிறுத்தி மாணவிகளை ஏற்றி செல்கின்றனர். தன்னலம் கருதாமல் பள்ளி மாணவிகளை பாதுகாக்கும் மூதாட்டி யின் செயலை பலரும் பாராட்டி வருகின் றனர்.
இதுகுறித்து மூதாட்டி பாண்டியம்மாள் கூறியதாவது: ஒத்தக்கடை பகுதியில் வசிக்கும் நான், 15 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் தற்காலிக ஊழியராக சேர்ந்தேன். இப்பள்ளிக்கு வரும் பெண் பிள்ளைகளை எனது பேத்திகளாக நினைத்து பத்திரமாக பாதுகாப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பள்ளி வளாகம் முழுவதும் சுற்றி வந்து கண்காணிப்பேன். சுற்றுச்சுவர் அருகே யாரேனும் பசங்க நின்றால் கண்டிப்புடன் யார் என விசாரிப்பேன். சந்தேகம் இருந்தால் காவல்துறையினருக்கு உடனே தகவல் தெரிவித்து விடுவேன்.
பெண் குழந்தைகளை கவனமாக பாதுகாக்கவேண்டும் அல்லவா.. என அக்கறை கலந்த வாஞ்சையோடு கூறினார் மூதாட்டி பாண்டியம்மாள்..! இவரைப் போன்ற பெண்களை பாராட்டத்தானே வேண்டும்..!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT