Last Updated : 05 Jul, 2024 03:53 PM

 

Published : 05 Jul 2024 03:53 PM
Last Updated : 05 Jul 2024 03:53 PM

மருத்துவ ஆராய்ச்சிக்கு உதவும் உடல் தானம் | HTT Explainer

கோவை: இந்திய அளவில் உடல் உறுப்புகள் தானம் அளிப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. மனித உடல் உறுப்புகள் தானம் என்பது மூளைச்சாவு அடைந்த பிறகு அவர்களின் பெற்றோர், உறவினர் ஒப்புதலோடு உறுப்புகளை தானமாகப் பெற்று அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்குவதாகும். அதேவேளையில், இயற்கை மரணம் அடைந்தவரின் உடலை தானமாக அளிப்பதும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இப்படி தானமாகப் பெறப்படும் உடலை வைத்துதான் மருத்துவ மாணவர்கள் மனித உடலை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

இதுகுறித்து, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் மணிவண்ணன் கூறியதாவது: நம் சமூகத்தில் இறந்து போன ஒருவரின் உடலை தானமாக அளிப்பதை செயற்கரிய செயலாகக் கருதுகிறேன். உடல் உறுப்புகளை தானமாக அளிப்பதற்கும், உடலையே தானமாக அளிப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. உடலுறுப்பு தானம் என்பது, குறிப்பிட்ட உறுப்பு செயல்இழந்தவருக்கு தானமாக பெறப்பட்ட உறுப்பு பொருத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர் உயிர் வாழ பயன்படுகிறது.

இறந்து போன ஒருவரின் உடலை தானமாக பெறுவது என்பது மனித உடலை பற்றி கற்பிக்கும் மருத்துவக் கல்விக்கானது. குறிப்பாக, உடல் தானம் செய்பவர்களை சமூகத்தில் மதிக்க வேண்டும். ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து தான் மாணவர்கள் மருத்துவ அனுபவத்தைப் பெறுகின்றனர். முன்னர் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தான் உடற்கூறியல் துறைக்கு தேவையான உடலை வாங்கி மனித உடலை பற்றிய ஆய்வுக்கு பயன்படுத்தி வந்தோம். இப்போது ஆய்வுக்குத் தேவையான அளவுக்கு உடல்கள் உள்ளன.

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களும் இயற்கை மரணம் அடைந்த பிறகு உடலை தானமாக அளிக்க முன்வருகின்றனர். உடல் தானம் அளிக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று, ‘மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்கு உபயோகிக்க யாருடைய தூண்டுதலுமின்றி முழு மனதுடன் விருப்பம் தெரிவிக்கிறேன். என்னுடைய வாரிசுகள் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள்’ என்று ரூ.20 முத்திரைத்தாளில் உறுதிச்சான்று அளிக்க வேண்டும்.

மேலும் வழக்கறிஞரிடம் இருந்து உறுதிச்சான்று (நோட்டரி பப்ளிக்) பெறப்பட வேண்டும். பின்னர், அவர் உயிரிழந்த பிறகு உடலை தானமாக அளிக்க மருத்துவரின் இறப்பு சான்றிதழ் வேண்டும். அதேபோல, மருத்துவ சிகிச்சையின் போது இறந்தால், மருத்துவரிடம் இருந்து இறப்பு சான்றிதழ் பெற்று உடல் தானமாகப் பெறப்படும். தானமாகப் பெறப்படும் உடலுக்கு முழு மரியாதை செய்து பெறப் படுகிறது.

உடல் தானம் செய்தவர் மரணம் அடைந்த பின்னர் அவரது உறவினர்களோ, வாரிசுகளோ இறந்த 8 மணி நேரத்துக்குள் அரசு மருத்துவக் கல்லூரி இஎஸ்ஐ மருத்துவமனையில் இருப்பிட மருத்துவ அலுவலரிடம் இறப்பு சான்றிதழுடன் ஒப்படைக்க வேண்டும். தானமாகப் பெறப்படும் உடலை மருத்துவமனைக்கு எடுத்து வர 155377 இலவச அமரர் ஊர்தி சேவை உண்டு. உடலை ‘எம்பாமிங்' செய்து, பதப்படுத்தி மாணவர்களின் உடற்கூறு ஆய்வுக்குப் பயன்படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு 0422-257301, 0422-257391 மற்றும் 9443189711 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x