Last Updated : 30 Jun, 2024 12:36 PM

1  

Published : 30 Jun 2024 12:36 PM
Last Updated : 30 Jun 2024 12:36 PM

உணவில் உப்பை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்: பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுரை

பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வநாயகம் | கோப்புப் படம்.

சென்னை: குறைந்த உப்பு உணவை எடுத்துக் கொள்ள நாம் பழக வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

சேபியன்ஸ் ஹெல்த் அறக்கட்டளை, சென்னை ஐஐடியின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம், அமெரிக்காவை சேர்ந்த தொண்டு நிறுவனமான 'ரிசால்வ் டூ சேவ் லைவ்ஸ்' ஆகியவை சார்பில் குறைந்த உப்பு உணவை எடுத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பயிலரங்கம் சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

அதிக உப்பை உட்கொள்வதற்கு எதிராக ஒன்றாக சேர்ந்து போராடுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேக் செய்யப்பட்ட உணவுகளில் உப்பு மற்றும் சோடியத்தின் அளவுகள் பதிக்கப்பட்ட லேபிள்களின் அவசியம் குறித்தும், இதில் சட்டபூர்வமான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறதா? உள்ளிட்டவை தொடர்பாகவும் பயிலரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் கலந்துகொண்டு பயிலரங்கை தொடங்கி வைத்தார். மேலும் உணவில் உப்பை குறைப்பது குறித்து விழிப்புணர்வை பரப்பும் வகையிலான புத்தகம் மற்றும் பதாகைகளை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது: ''குறைந்த உப்பை எடுத்துக் கொள்வது என்பது ஒரு மருத்துவ சவாலாக இல்லாமல் வணிக நிர்ணயமாக மாறி வருகிறது. ஒவ்வொரு உணவுகளிலும் உப்பின் அளவை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு 8 கிராம் அளவு உப்பை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முடிந்த அளவு குறைந்த அளவு உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். இதை பின்பற்ற முதலில் கஷ்டமாக இருக்கும். ஆனால் பின்னர் நமக்கு எளிதாக பழகிவிடும். சில நாடுகளில் மக்களின் நலன் கருதி இவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. நாமும் இதை பின்பற்ற வேண்டும். இதன்மூலம் உயர் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்கலாம்.'' இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் ரிசால்வ் டூ சேவ் லைவ்ஸ்' தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் அமித் ஷா, சேபியன்ஸ் ஹெல்த் அறக்கட்டளை தலைவர் ராஜன் ரவிச்சந்திரன், அறங்காவலர் ஆர்.சுந்தர், ஐஐடி பேராசிரியர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x