Published : 28 Jun 2024 08:04 PM
Last Updated : 28 Jun 2024 08:04 PM

“வியந்து உள்ளம் பூரித்தேன்!” - மதுரை அரசு காசநோய் மருத்துவமனையை பாராட்டிய ப.சிதம்பரம்

மதுரை: ‘தமிழ் இந்து திசை’ நாளிதழில் வெளியான தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை செய்தியை சுட்டிக்காட்டி, “இப்படி ஒரு அரசு மருத்துவமனையா, என்று வியந்து மனதுக்குள் வியந்துபோனேன், உள்ளம் பூரித்தேன்” என்று முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 1960-ம் ஆண்டு காமராஜரால் தொடங்கி வைத்த அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்த அரசு காசநோய் மற்றும் தொற்றுநோய்களுக்கான அரசு மருத்துவமனை உள்ளது. கடந்த 11 ஆண்டிற்கு முன் வரை இந்த மருத்துவமனை, பாழடைந்த கட்டிடமாகவும் துருப்பிடித்த படுக்கைகளும், அதன் வளாகம் மரங்கள் இல்லாத சூழலால் பாலைவனம் போலவும் காணப்பட்டது.

இந்த மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியாக (ஆர்எம்ஓ) டாக்டர் காந்திமதி நாதன் வந்தபிறகு பாலைவனமாக இருந்த மருத்துவமனை வளாகம், சோலைவனமாக மாறியதாக தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை பற்றி புகைப்படங்களுடன் ‘தமிழ் இந்து திசை’ நாளிதழில் கடந்த 27-ம் தேதி விரிவான செய்தி வெளியானது.

இறப்பின் தருவாயில் இருக்கும் காசநோய்களும், பிற தொற்றுநோயாளிகளும் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கனிவான சிகிச்சையும் ஆறுதலான வார்த்தைகளும் மட்டுமே தேவையாக இருக்கிறது. அதனை இந்த மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்து வருகிறார்கள். இந்த செய்தியைப் பார்த்த முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், தனது ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்ததோடு, அந்த மருத்துவமனை நிர்வாக அதிகாரி டாக்டர் காந்திமதி நாதனை பாராட்டியுள்ளார்.

இவர் இந்த மாதத்துடன் ஒய்வு பெறும்நிலையில் அவருக்கு நிகரான சேவை மனப்பான்மையுடன் கூடிய ஒருவரை நியமிக்கும்படி, தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “27-6-2024 தேதியிட்ட 'இந்து தமிழ் திசை' பத்திரிக்கையில் பக்கம் 6-ல் மதுரை அருகில் உள்ள தோப்பூரில் அமைந்துள்ள காச நோய் மற்றும் தொற்று நோய்கள் அரசு மருத்துவ மனையைப் பற்றிப் படித்து உள்ளம் பூரித்தேன். இதன் தலைமை மருத்துவர் 11 ஆண்டுகளில் கொண்டு வந்த சீர்திருத்தங்களைப் பற்றி அறிந்து எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள்.

இப்படி ஓர் அரசு மருத்துவமனயா என்று வியந்து மனதுக்குள் பாராட்டினேன். டாக்டர் காந்திமதிநாதன் 30-6-2024 அன்று பணி நிறைவு அடைகிறார். அவருக்கு ஈடான அர்ப்பணிப்புள்ள தலைமை மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அன்புடன் கோருகிறேன். (டாக்டர் காந்திமதிநாதனை எனக்குத் தெரியாது)” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது ப.சிதம்பரத்தின் இந்த பதிவு, அரசு மருத்துவமனை வட்டாரத்தில் அதிகம் பகிரப்பட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவராலும் பாராட்டப்படுகிறார்கள்” என்ரு கூறியுள்ளார். | வாசிக்க > நோய் தீர்க்கும் சோலைவனமாக மாறிய தோப்பூர் மருத்துவமனை!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x