Published : 21 Jun 2024 01:02 PM
Last Updated : 21 Jun 2024 01:02 PM

காசா குழந்தைகளுக்கு உணவளிக்கும் ஃபுட் பிளாகரின் உன்னத செயல்!

கான் யூனிஸ்: பாலஸ்தீனத்தின் காசாவின் காற்றில் வெடி மருந்தின் வாசம் இரண்டறக் கலந்துள்ளது. பெரும்பாலான மக்கள் காசா நிலப்பகுதியின் தெற்குப் பகுதியில் அடைக்கலம் தேடி தஞ்சம் அடைந்துள்ளனர். உணவு, உறைவிடம் என வாழ்வின் அடிப்படையை தேடித் திரிகின்றனர்.

இந்தச் சூழலிலும் இஸ்ரேல் பாதுகாப்பு படை, தனது தாக்குதலை நிறுத்தவில்லை. தங்கள் வசமுள்ள ஆயுதங்களை கொண்டு காசா மீது தாக்குதல் மேற்கொண்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில், காசாவை சேர்ந்த ஃபுட் பிளாகர் ஒருவர் அங்குள்ள கான் யூனிஸ் நகரில் இருந்த வண்ணம் குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உணவு வழங்கி வருகிறார்.

ஹமதா ஷகோரா (Hamada Shaqoura) எனும் 32 வயது நபர் தான் அந்த ஃபுட் பிளாகர். பாலஸ்தீனத்தின் உணவு முறையை ஆன்லைன் ஊடாக உலகுக்கு விருந்து படைக்கும் நோக்கில் சமூக வலைதளங்களில் அவர் பதிவிட தொடங்கியுள்ளார். ஆனால், அந்த நிலை கடந்த அக்டோபருக்கு பிறகு அப்படி இருக்கவில்லை. அனைத்தும் மாறியது.

தங்களது உயிரை காத்துக் கொள்ளும் நோக்கில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த சூழலில் உதவிகளாக கிடைக்கும் பொருட்களை கொண்டு மொத்தமாக உணவு சமைத்து, அதனை முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு அவர் பரிமாறி வருகிறார். உணவு சமைப்பது மற்றும் அதனை வழங்குவது என அனைத்தையும் தனது சமூக வலைதள பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறார்.

“எங்கள் உணவுகளை உலகுக்கு காட்சிப்படுத்தும் வகையில் எனது பணியை தொடங்கினேன். ஆனால், போர் சூழல் அனைத்தையும் மாற்றியது. இப்போது நாங்கள் தயாரிக்கும் உணவுகளில் ஊட்டச்சத்து என்பது அறவே இல்லை. இருந்தாலும் இயன்றவரை குறைந்தபட்ச ஊட்டச்சத்தாவது குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என சமைத்து வருகிறோம்.

முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அதன் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் உள்ளது. அதற்கு காரணம் தாக்குதல் அச்சுறுத்தல் தான். சுகாதாரமான குடிநீர், சமையல் எரிவாயு, உணவு சமைப்பதற்கான பொருட்கள் என எதுவும் எங்களுக்கு முறையாக கிடைப்பதில்லை. இருந்தாலும் இதனை நாங்கள் சமாளித்து வருகிறோம். நாங்கள் சுவாசிக்கும் காற்று கூட ஆயுத புகையினால் மாசடைந்துள்ளது.

காசாவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின் நலனை மட்டுமே இப்போதைக்கு எந்நேரமும் கருத்தில் கொண்டுள்ளோம். இங்குள்ள தன்னார்வ அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் உணவு சமைத்து குழந்தைகளுக்கு வழங்கி வருகிறோம்

கடந்த அக்டோபருக்கு பிறகு எங்கள் வாழ்வு இப்படி மாறும் என நாங்கள் எண்ணவில்லை. எங்கள் வாழ்வே போராட்டமாக உள்ளது. இருந்தாலும் இந்த நேரத்தில் பசித்த மக்களுக்கு உணவளிக்க வேண்டுமென்ற ஆர்வம் வந்தது. குறிப்பாக இதன் மூலம் குழந்தைகள் முகத்தில் புன்னகை போக்க செய்ய வேண்டுமென விரும்புகிறேன். அதனால் என்னால் முடிந்த பணிகளை செய்து வருகிறேன்.

இதை சமூக வலைதளத்தில் பதிவும் செய்து வருகிறேன். அதில் வரும் கமெண்டுகள் எங்களுக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளாக அமைந்துள்ளன. உலக மக்கள் இந்நேரத்தில் எங்களுக்கு வழங்கி வரும் இந்த ஆதரவினை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர்கள் அனைவருக்கும் நன்றி என்பது மட்டுமே எங்கள் பதிலாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அவரது இன்ஸ்டா பக்கம் சுமார் 4 லட்சம் ஃபாலோயர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது. காசாவின் இப்போதைய சூழலுக்கு ‘மனிதம் ஒன்றே தீர்வாகும்’ என பலரும் சொல்லி வருகின்றனர். அவருக்கு தன்னார்வ அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x