Published : 18 Jun 2024 03:37 PM
Last Updated : 18 Jun 2024 03:37 PM
திருப்புவனம்: கீழடியில் செட்டிநாடு கட்டிடக் கலையில் அகழ் வைப்பகம் வடிவில் காவல் நிலையம் கட்டப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்நிலைய எல்லை மதுரை, விருதுநகர் மாவட்டங்களின் எல்லை வரை பரந்து விரிந்துள்ளது. இதனால் இக்காவல் நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் போலீஸார் சென்று வருவதில் சிரமம் இருந்து வந்தது. இதையடுத்து கீழடி, கொந்தகை பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கை எழுந்தது. இதனிடையே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
அங்கு கண்டறியப்பட்ட பல ஆயிரம் தொல் பொருட்களை பொதுமக்கள் பார்வையிட உலகத் தரம் வாய்ந்த கீழடி அகழ் வைப்பகம் அமைக்கப் பட்டது. இதைப் பார்க்க தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். வெளி மாவட்டம், வெளி மாநிலம் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு திருப்புவனம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு சிரமம் இருந்ததை அடுத்து ராமநாதபுரம் டிஐஜி துரை புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
அத்தோடு புறக்காவல் நிலையம் போன்று இல்லாமல் நிரந்தர கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டுமென அப்போதைய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் கேட்டு கொண் டார். அதை ஏற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் புறக்காவல் நிலையம் கட்ட ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டுமானப்பணி தொடங்கியது. இந்த காவல் நிலையம் செட்டி நாடு கட்டிடக்கலை பாணியில், கீழடி அகழ் வைப்பகம் வடிவில் கட்டப் பட்டுள்ளது.
இந்த காவல் நிலையத்தை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளார். இங்கு எஸ்.ஐ. தலைமையில் 10 போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி அமர்த்தப்பட உள்ளனர். மேலும் இந்த காவல் நிலையம் முன் இடையூறாக உள்ள மின் கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும். நிரந்தரக் கட்டிடம் கட்டப்பட்டதால், புறக் காவல் நிலையத்தை விரைவிலேயே நிரந்தர காவல் நிலையமாக மாற்ற வேண்டுமென அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT