Last Updated : 14 Jun, 2024 05:00 PM

 

Published : 14 Jun 2024 05:00 PM
Last Updated : 14 Jun 2024 05:00 PM

வீட்டுமனைகளாக மாறி வரும் விளைநிலங்கள்: நாஞ்சில் நாட்டின் நெல் வயல்கள் பாதியாக குறையும் ஆபத்து

நாகர்கோவில் அருகே வேகமாக வீட்டு மனைகளாக மாறிவரும் நெல்வயல் பரப்புகள்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைநிலங்கள் வேகமாக வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. இன்னும் 5 ஆண்டுகளுக்குள் தற்போது இருக்கும் நெல் வயல்களின் பரப்பானது 6,000 ஹெக்டேரில் இருந்து 3,000 ஹெக்டேராக குறையும் ஆபத்து உள்ளது.

நாஞ்சில்நாடு என போற்றப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர் நிலைகள் நிறைந்துள்ளன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய பாசன அணைகள், 2040-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் உள்ளன. இதனால், நெற்பயிரை விவசாயிகள் பெரிதும் பயிரிட்டு வந்தனர். தாங்கள் விவசாயத்துக்கு செலவழிக்கும் தொகையை கூட மகசூல் மூலம் பெற முடியாத நிலையில், தங்கள் நிலங்களில் மாற்றுப் பயிர்களை பயிரிட தொடங்கினர். இதன்படி தென்னை, வாழை, ரப்பர், மரச்சீனி உள்ளிட்ட மாற்று விவசாயத்தின் பக்கம் தங்கள் கவனத்தை விவசாயிகள் திசை திருப்பினர்,

இச்சூழ்நிலையில் ரியல் எஸ்டேட் பேர்வழிகளின் வலையில் சிக்கி விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் கும்பல்களின் ஆதிக்கத்தால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்கள் கூறுபோடப்பட்டு வீட்டு மனைகளாக்கப்பட்டு வருகின்றன. இதனால், பசுமை போர்த்திய நெல் வயல்கள் எல்லாம் புழுதி மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன.

கடந்த 2000-ம் ஆண்டில் 6,500 ஹெக்டேராக இருந்த நெல் வயல்கள் தற்போது 6,000 ஹெக்டேராக குறைந்துள்ளது. இதுவும் 5 ஆண்டுகளுக்குள் பாதியாகும் நிலை உள்ளது. வெள்ளமடம் அருகே பீமநகரி பகுதியில் உள்ள வற்றாத நீர்நிலைகள் மூலம் பயிர் செய்யப்பட்டு வந்த விவசாய விளை நிலங்கள் அனைத்தும் கபளீகரம் செய்யப்பட்டு வீட்டு மனைகளாக்கப்பட்டு வருகின்றன.

பெரும் லாபம் ஈட்ட வேண்டும் என்ற பேராசையால், விவசாய நிலங்களை அரசியல் பிரமுகர் துணையோடு அழித்து வருகின்றனர். மேலும் நீர் நிலைகளின் பாசன கால்வாய்களும் இவர்களது அகோர பசிக்கு இரையாகிப் போனது. இதனால் இங்கு விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளதோடு நீர் ஆதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது.

விவசாய விளை நிலங்களை நிரப்புவதற்கு தேவைப்படும் மண் நெல்லை மாவட்டத்தில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் இங்குள்ள கிராம சாலைகள் வழியாக கொண்டு வரப்படுகிறது. அதிக பாரம் கொண்ட இந்த வாகனங்களின் எடையைத் தாக்குபிடிக்காமல் சாலைகள் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால், இந்த சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும், குடிநீர் விநியோக குழாய்களும் கனரக வாகனங்களால் உடைந்து பெரிதும் பாதிப்பு அடைவதால் இப்பகுதி மக்கள் நீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து அமைப்பினர்.

விளை நிலங்களை வீட்டு மனைகனாக்க அனுமதி பெறப்பட்டு உள்ளதா? அவ்வாறு கொடுக்கப்பட்டால் சட்டவிரோதமாக இத்தகைய முறைகேட்டுக்கு காரணமாக இருப்பவர்கள் யார்? இத்தகைய அத்துமீறல்களை மாவட்ட நிர்வாகம் ஏன் இன்னும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது? விவசாய நிலங்கள் அழிவை தடுக்க அறிவிக்கப்பட்ட நிபந்தனைகள் எதுவுமே இங்கு பின்பற்றப்படவில்லை. இருந்தும் உரிய துறையினர் மவுனம் காப்பது ஏன்? சட்ட விரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

இதுபோன்று பொதுநல ஆர்வலர்கள் மத்தியில் எழும் கேள்விகளுக்கு எந்த பதிலும் இன்றி அதிகாரிகள் தரப்பில் மவுனம் காத்து வருகின்றனர். தொடரும் இதுபோன்ற விளைநிலங்களை கபளீகரம் செய்யும் நிகழ்வுகளால், குமரி மாவட்டத்தின் விவசாய நிலங்கள் முற்றிலுமாக அழிவதோடு நீர் ஆதாரங்களும் பறிபோய் குடிநீர் பஞ்சம் உருவாகும் நிலை விரைவில் ஏற்படலாம். அத்தகைய அழிவை உருவாகிடாமல் தடுத்திடும் வகையில் உடனடியாக சட்டத்துக்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பதிசாரம் அருகே பீமநகரி பகுதியில் கோயில் நிலம் மற்றும் விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி வருவதை கண்டித்தும், விதிமுறையை மீறி செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், வெள்ளமடம் சந்திப்பில் நேற்று மாலை அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விஷ்வ இந்து பரிசத் மாநில நிர்வாகி காளியப்பன், பாஜக மாவட்ட துணைத் தலைவர் சொக்கலிங்கம், விஎச்பி மாநகரத் தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x