Published : 14 Jun 2024 04:54 PM
Last Updated : 14 Jun 2024 04:54 PM
மதுரை: மதுரையில் விசிட்டிங் கார்டுகளில் தேசத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோரின் ஓவியங்களை வரைந்து, தனியார் பள்ளி ஆசிரியர் அசத்துகிறார்.
கலைகளில் முக்கியமானது ஓவியக் கலை. உருவங்களை தத்ரூபமாக காட்சிப்படுத்துவதன் மூலம் காண்போரை கவரலாம். ஆர்வத்துடன் வரையும்போது எதையும் உயிரோட்டமான ஓவியமாக்கலாம். இதன்மூலம் சிறந்த ஓவியராகலாம். இக்கலையில் சிறந்து விளங்க கடுமையான பயிற்சியும், முயற்சியும் தேவை.
அந்த வகையில் மதுரை வேலம்மாள் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மு.அ. தங்கராஜூ என்பவர் தனது ஆசிரியர் பணியோடு கற்பனையில் தோன்றும் பல்வேறு காட்சிகள், மனித நிழல் படங்களை ஓவியமாக வடிக்கிறார். எங்கெல்லாம் தனது ஓவியத் திறமையை வெளிக்கொணர முடியுமோ அவற்றில் எல்லாம் வரைகிறார். சோப்பு, தபால் அட்டை, அரச இலையை தொடர்ந்து தற்போது விசிட்டிங் கார்டுகளிலும் வண்ண ஓவியங்களை வரைந்து அசத்துகிறார் தங்கராஜூ.
அவர் கூறியதாவது: கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக வேலம்மாள் போதி கேம்பஸ் வளாகத்தி லுள்ள சிபிஎஸ்சி பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறேன். பணி நேரம் தவிர, எஞ்சிய நேரத்தில் ஓவியங்கள் பற்றியே யோசிப்பேன். ஏற்கனவே சோப்புக் கட்டிகளை குடைந்து, சிலைகள் போன்ற ஓவிங்களை வரைதல், தபால் அட்டைகளில் வண்ண ஓவியங்கள், அரச இலைகளை பக்குவப்படுத்தி பல்வேறு ஓவியங்களை தீட்டுதல் மற்றும் ரங்கோலி, கார்ட்டூன் போன்ற பல ஓவியங்களை வரைந்துள்ளேன். எனது பொழுதுபோக்கே ஓவியங்கள் வடிப்பதுதான்.
ஓவியங்களை வித்தியாசமான கோணங்களில் வரைய வேண்டும் என யோசித்தபோது, சிறிய வடிவிலான விசிட்டிங் கார்டுகளில் வரைய திட்டமிட்டேன். இதன்படி, விசிட்டிங் கார்டுகளின் பின்புறம் தேசியத் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், கவிஞர்கள், இயற்கை காட்சிகள், பறவைகள், கார்ட்டூன் உள்ளிட்ட பல்வேறு வண்ண ஓவியங்களை வரைகிறேன். இதன்மூலம் விசிட்டிங் கார்டில் உள்ள ஒருவரை பற்றிய தகவல்களுடன் பல்வேறு ஓவியங்களை காணலாம் என்பதால் இம்முயற்சியை எடுத்தேன்.
இந்த சிறிய வடிவிலான அட்டையில் வரைவது சிரமம்தான் என்றாலும் பெயின்ட், பேனாக்கள் மூலமாக தொடர்ந்து வரைகிறேன். ஓவியம் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வீட்டில் வைத்து கற்றுத் தருகிறேன். கல்வியுடன் ஏதாவது ஒரு தனித்திறன் இன்றைய மாணவர்களுக்கு அவசிய தேவை. அதற்கேற்ப அவர்கள் தங்களது நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT