Published : 13 Jun 2024 05:28 PM
Last Updated : 13 Jun 2024 05:28 PM
உதகை: நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 6 பண்டைய பழங்குடியினரில் தோடர்களும் ஒரு வகையினர். இயற்கையோடு ஒன்றி வாழும் இவர்களின் வாழ்க்கையில் எருமைகள் ஓர் அங்கம். இந்த எருமைகள் உலகில் வேறு எங்கும் இல்லை என்பதும், தோடர்களுக்காக கடவுளால் படைக்கப்பட்டவை என்பதும் இவர்களின் நம்பிக்கை.
தோடர் எருமைகளின் கொம்புகள் 1.5 மீட்டர் வரை வளரும். இவற்றின் உடலமைப்பு மிகவும் முரட்டுத்தன்மை யுடன் கூடிய தோற்றம் உடையது. ஓர் எருமை 5 லிட்டருக்கும் குறை வாகவே பால் தரும். ஆனால், பால் மிகவும் அடர்த்தியாகவும், திடமாகவும் இருக்கும். தோடரின மக்களின் பாரம்பரிய உணவான பால் சாதம், நெய் சாதம், ஓட்வியதோர் எனப்படும் உருண்டை சாதம் பாலை சார்ந்தே உள்ளது. ஒவ்வொரு தோடரின மக்களின் வீட்டிலும் குடும்ப உறுப்பினர்போல எருமை பாவிக்கப்படுகிறது.
எமனின் வாகனமாக எருமை கருதப்படும் நிலையில், தோடர்கள் அவற்றை இறைவனுக்கு சமமாக கருதுகின்றனர். அனைத்து கோயில்களிலும் எருமையின் கொம்பு அல்லது எருமையின் தலை வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். கோயில் திறந்திருக்கும் காலத்தில் பூசாரி மட்டுமே கோயில் எருமைகளிலிருந்து பாலை கறந்து, அதில் அவாஹானம் செய்வார். பாலை தயிராக்கி, அதை கடைந்து மோர், வெண்ணெய் செய்து, வெண்ணெய்யை உருக்கி நெய்யாக்கி, அதை பயன்படுத்தி கோயில் விளக்கு ஏற்றப்படும். கோயில் திறக்கப்படாத காலத்தில், இந்த எருமைகளிலிருந்து பால் கறக்கப்படமாட்டாது.
உப்பு சாஸ்திர விழா: இந்த மக்களின் மிகவும் முக்கியமான ‘உப்பொட்டித்’ எனப்படும் உப்பு சாஸ்திர விழா, ஆண்டுக்கு இரு முறை கொண்டாடப் படுகிறது. காட்டில் இரண்டு சிறிய குழி வெட்டி, அதில் பூசாரி தண்ணீர் ஊற்றி உப்பை போட்டு, எருமைகள் பெருகவும், தங்களுக்காக எப்போதும் உழைக்கவும், அவ்வற்றின் நலனுக்காக இயற்கையை வணங்கி அந்த நீரை எருமைகளை பருக செய்வார். இதனால், எருமைகள் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
சடங்குகளில் பங்கு: பெண் கருத்தரித்த 5 முதல் 7-வது மாதத்தில் ‘வில் அம்பு சாஸ்திரம்’ நடைபெறும். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில், பெண்ணுக்கு எருமைப் பாலை குடிக்க கொடுப்பார்கள். குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு பரிசாக எருமைகளை வழங்குவார்கள். தோடர் இனத்தில் ஒவ்வொருவருக்கும் எருமைகளை பரிசாக கொடுப்பது வழக்கம். அதேபோல, யாரேனும் தவறு செய்தால் அபராதமாக எருமையை கொடுக்க வேண்டும். எருமையை இழந்தால் பேரிழப்பாக தோடரின மக்கள் கருதுவதால், இந்த தண்டனையால் தவறுகள் குறையும் என்பதுதான் இதற்கு காரணம்.
குறையும் எருமைகள்: இது தொடர்பாக தோடரின தலைவர் மந்தேஸ் குட்டன் கூறும்போது, “ஒரு குடும்பத்துக்கு 100-க்கு மேல் இருந்த எருமைகள் தற்போது குறைந்துவிட்டன. எருமைகளை வனங்களில் மேய்ச்சலுக்கு விடும்போது புலி, சிறுத்தைகள் தாக்கி இறந்தன. புல்வெளிகளை சீகை, கற்பூரம் மற்றும் பைன் மரங்கள் ஆக்கிரமித்ததால், மேய்ச்சல் நிலங்கள் குறைந்து பசுந்தீவனம் கிடைக்காமல் உடல் நலன் குன்றி இறக்கின்றன” என்றார்.
குறைந்து வரும் தோடர் எருமைகளை பாதுகாக்க வேண்டுமென, சமீபத்தில் சாண்டிநல்லா ஆடு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித் தார். சாண்டிநல்லா ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியை பிரேமா கூறும்போது, “நீலகிரி தோடர் பழங்குடியின மக்களின் எருமைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் 1,200 தோடர் பழங்குடியின எருமைகள் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது, இதன் எண்ணிக்கையை அதிகரிக்க ‘தோடர் இன எருமைகள் பாதுகாப்பு திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.
தோடர் மக்களிடமிருந்து 35 தோடர் இன எருமைகளின் கிடா கன்று குட்டிகள் வாங்கப்பட்டு, சாண்டிநல்லா ஆராய்ச்சி நிலையத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. இனப்பெருக்க வயதை அடைந்தவுடன் தேவைப்படுபவர்களுக்கு பாதி விலையில் வழங்கப்படும். இதுதவிர, இந்த பாதுகாப்பு திட்டம் மூலமாக தோடர் பழங்குடியினரின் எருமைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் பனி காலத்தில் தேவைக்கேற்ப புல் தீவனம் வழங்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT