Last Updated : 31 May, 2024 04:17 PM

 

Published : 31 May 2024 04:17 PM
Last Updated : 31 May 2024 04:17 PM

செங்கல்பட்டு: ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிக்கு  3 சக்கர வாகனம் வழங்கல்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘நீங்கள் நலமா’ திட்ட பயனாளிகளிடம் தொலைபேசியில் உரையாடிய மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் முதல்வரின் ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் சுயதொழில்புரிந்து வரும் மாற்றுத்திறனாளியிடம் நேரடியாக தொலைபேசியில் உரையாடிய மாவட்ட ஆட்சியர், அவரின் கோரிக்கையை ஏற்று மூன்று சக்கர வாகனம் வழங்க உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பகுதியை சேர்ந்தவர் நடராஜ். கூலி தொழிலாளியான இவர் கடந்த 2022-ல் நடந்த விபத்து ஒன்றில் தனது இருகால்களை இழந்து மாற்றுத்திறனாளி ஆனார். இவருக்கு, எல்லம்மாள் என்ற மனைவியும் சுதர்சன்(12), ஆசன்ராஜ்(10) என்ற மகன்களும் உள்ளனர். இதனால், வேலை வாய்ப்பை இழந்த நடராஜ், 2022-ல் தாட்கோ திட்டத்தின் மூலம் மானியத்துடன் ரூ.1,66,500 வங்கிக் கடன் பெற்று சுயதொழில் புரிந்து வருகிறார். இதன்மூலம், கிடைக்கும் வருவாயில் தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். மேலும், இவரது மனைவி கட்டிட வேலை செய்து வருகிறார். மகன்கள் இருவரும் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள்.

இந்நிலையில், முதல்வரின் ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெறும் பயன்கள் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தொலைபேசி மூலம் பயனாளிகளிடம் நேரடியாக உரையாடும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசியில் உரையாடினார். இதில், நடராஜிடம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது, மாவு தொழில் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் மற்றும் தொழிலை மேலும் விரிவுப்படுத்துவதற்கான திட்டம் உள்ளதா? மற்றும் வங்கி கடனை செலுத்துதல் போன்றவை குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். அதற்கு, பயனாளி நடராஜ் தனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கி உதவ வேண்டும் என தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு தனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்ககோரி மனு கொடுத்திருப்பதையும் ஆட்சியருக்கு அவர் நினைவூட்டினார்.

இதையடுத்து, அவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.மேலும், நடராஜுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து, நடராஜனின் மனைவி எல்லாமாள் கூறியதாவது: ‘விபத்தில் கால்களை இழந்ததும், அரசு திட்டத்தின் மூலம் வங்கிக் கடன் பெற்று இட்லிமாவு அரைத்து விற்பனை செய்து வருகிறோம். கால்களை இழந்ததால் நடமாட முடியாமல் ஒரே இடத்தில் அமர்ந்து மாவு விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதனால், மூன்று சக்கர வாகனம் கிடைத்தால் பல்வேறு இடங்களுக்கு நேரில் மாவு விற்பனை செய்ய வசதியாக இருக்கும் என கருதினோம். இதற்காக கடந்த ஆண்டு மனுவும் வழங்கினோம். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, எனது கணவரின் நிலை அறிந்து மூன்று சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x