Published : 28 May 2024 05:10 PM
Last Updated : 28 May 2024 05:10 PM

‘விரக்தி வேண்டாமே!’ - காவ்யா மாறன் அணுகுமுறைக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பதிவு

காவ்யா மாறன் | கோப்புப்படம்

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அது முதலே அந்த அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் குறித்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக உள்ளது.

தனது அணியில் மோசமான ஆட்டத்தை கண்டு அவர்கள் கலங்கி நின்றார். அதே நேரத்தில் எதிரணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஆட்டத்தையும் போற்றி இருந்தார். இந்த சூழலில் அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

“எங்களை நீங்கள் பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள். அதற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். விரக்தியாக உணர வேண்டாம்” என ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘கோப்பை வெல்வதற்கான தகுதி கொண்டவர்’, ‘யாராலும் வெறுக்க முடியாத ஒரே பெண்’, ‘தன் கண்ணீரை மறைத்துக் கொண்டு எதிரணியை பாராட்டியவர்’ என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆடும் போட்டிகளின் போது காவ்யா மாறன் ஆதரவு கொடுப்பார். அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன்களை கேமரா கண்கள் கவர் செய்யும். அதன் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் பார்வையாளர்கள் மத்தியில் அவர் பரவலாக அறியப்படுகிறார்.

முன்னதாக, தோல்விக்குப் பின் ஹைதராபாத் அணி வீரர்கள் குழுமியிருந்த ட்ரெஸ்ஸிங் அறைக்குச் சென்ற காவ்யா மாறன், அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தும் வீடியோவை அந்த அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. அதுவும் வைரல் ஆனது. ட்ரெஸ்ஸிங் அறையில் வீரர்களிடம் பேசும் காவ்யா மாறன், “நீங்கள் அனைவரும் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். அதை கூறவே இங்கு வந்தேன். டி20 கிரிக்கெட்டை விளையாடும் விதத்தையே நீங்கள் மாற்றிவிட்டீர்கள். அனைவரும் நம்மைப் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டீர்கள். அனைவருக்கும் நன்றி.

கடந்த ஆண்டு நாம் கடைசி இடத்தை பிடித்திருந்தாலும், இந்த முறை உங்களின் திறமையால் முன்னேறி வந்துள்ளோம். அதற்கு ரசிகர்களின் ஆதரவும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. கொல்கத்தா அணி வெற்றி பெற்றபோதிலும், எல்லோரும் நம்மைப் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், நாம் விளையாடிய கிரிக்கெட்டைப் பற்றி இன்னும் பேசுவார்கள் என்று நம்புகிறேன். நாம் இறுதிப் போட்டியில் விளையாடியிருக்கிறோம். மற்ற அணிகள் நாம் விளையாடுவதை பார்த்துகொண்டிருந்தனர். உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று அவர் பேசியதைக் குறிப்பிட்டும் நெட்டிசன்கள் பாராட்டி வந்தது கவனிக்கத்தக்கது.

— Travis Head

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x