Published : 19 May 2024 03:39 PM
Last Updated : 19 May 2024 03:39 PM
ஆலப்புழா: கேரள மாநிலத்தில் 14 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற தம்பதியரை, குடும்ப நல நீதிமன்றம் மீண்டும் இல் வாழ்க்கையில் சேர்த்து வைத்துள்ளது. அண்மையில் நடைபெற்ற இந்த நெகழ்ச்சிகர சம்பவம் குறித்து தற்போது பார்ப்போம்.
பல்வேறு காரணிகளால் நாடு முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து பெறுவோரின் எண்ணிக்கை கூடி வரும் நிலையில் கேரளாவின் ஆழப்புழாவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நீதிமன்ற தலையீடு காரணமாக விவாகரத்து பெற்ற தம்பதியர், தங்களது திருமணத்தை மீண்டும் சட்டப்படி பதிவு செய்ய முன்வந்துள்ளனர்.
58 வயதானவர் சுப்ரமணியன். 49 வயதானவர் கிருஷ்ணகுமாரி. இவர்கள் இருவரும் சட்ட ரீதியாக பிரிந்த நிலையில் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 2006-ல் திருமணம் நடைபெற்றது. முதல் சில ஆண்டுகள் அவர்களது வாழ்க்கை இனிதாக கடந்துள்ளது. அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அகல்யா என பெயர் சூட்டியுள்ளனர்.
அதன் பின்னர் அவர்களது உறவில் விரிசல் ஏற்பட 2010 மார்ச்சில் விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து, ஜீவனாம்சம் கோரி கிருஷ்ணகுமாரி, ஆலப்புழா குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். அதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த பிரச்சினையை சுமுகமாக பேசி குடும்ப நல நீதிமன்றம் மூலம் தீர்வு காணுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய ஆலோசனையை அடுத்து இருவரும் சேர்த்து வாழ சம்மதம் தெரிவித்தனர். அவர்கள் இருவருக்கும் விவாகரத்து கொடுத்த நீதிமன்றத்தில் இது நடந்துள்ளது.
இதன் காரணமாக 15 வயதான அவர்களது மகள் அகல்யா, தந்தை மற்றும் தாயுடன் சேர்ந்து வாழ ஆர்வத்துடன் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT