Published : 18 May 2024 06:40 AM
Last Updated : 18 May 2024 06:40 AM

ஆந்திராவில் 6 வயது சிறுவனுக்கு நின்ற இதயத்தை சிபிஆர் செய்து காப்பாற்றிய பெண் மருத்துவர்: குவியும் பாராட்டு

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடா ஐயப்ப நகரை சேர்ந்த சாய் (6) வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி எறியப்பட்டார். இந்த அதிர்ச்சியில் பேச்சு, மூச்சின்றி சாய் கீழே விழுந்து விட்டார். இதனை கண்ட சிறுவனின் தந்தை அலறியபடி ஓடிச்சென்று, தனது மகனை தோள் மீது தூக்கிக்கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடினார்.

டாக்டர் ரவளி, சிறுவன் சாய் அதே சமயம் விஜயவாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் ரவளி காரில் அந்த பக்கம் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு தந்தை மகனை தோளில் சுமந்தபடி தூக்கி செல்லும் காட்சியை பார்த்து, காரில் இருந்து இறங்கி நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார்.

பின்னர், சிறுவனை பரிசோதித்து விட்டு, சாலையில் சிறுவனை கிடத்தி, அவரது மார்பில் இரண்டு கைகளை வைத்து அழுத்த ஆரம்பித்தார். இதனை மருத்துவ ரீதியாக சிபிஆர் என கூறுகின்றனர். சுமார் 7 நிமிடங்கள்வரை அப்படி அழுத்திய காரணத்தினால் அந்த சிறுவன் மெல்ல மூச்சு விட ஆரம்பித்தார். அதன் பின்னர் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிறுவன் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இது கடந்த மே 5-ம் தேதி நடந்துள்ளது. இந்த சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டதில் இது தற்போது வைரல் ஆகி வருகிறது.

— TNIE Andhra Pradesh (@xpressandhra) May 17, 2024

இதுகுறித்து டாக்டர் ரவளி கூறியதாவது:

மூத்த டாக்டர் ஒருவரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு, மருத்துவமனைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது சிறுவனை அவரது தந்தை கண்ணீர் விட்டு அழுதபடி தூக்கி சென்ற காட்சியை பார்த்தேன். உடனே வாகனத்தை ஓரத்தில் நிறுத்திவிட்டு, அவரிடம் நடந்ததை கேட்டறிந்தேன். உடனே அச்சிறுவனை பரிசோதித்ததில், உடனடியாக சிபிஆர் அவசியம் என்பதை உணர்ந்தேன்.

டாக்டர் ரவளி, சிறுவன் சாய்

தொடர்ந்து முயற்சித்தேன். பலன் கிடைத்தது. ஒரு சிறுவனின் உயிரை காப்பாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிபிஆர் செய்வதை அனைவரும் கற்றுக்கொண்டால் பலரது விலை மதிப்புமிக்க உயிர்களை காப்பாற்றி விடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x