Last Updated : 16 May, 2024 01:39 PM

 

Published : 16 May 2024 01:39 PM
Last Updated : 16 May 2024 01:39 PM

கோவை மாவட்டத்தில் புகையிலை இல்லாத 29 கிராமங்கள் - 1,343 கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ்

கோப்புப் படம்

கோவை: கோவை மாவட்டத்தில் 29 கிராமங்கள் புகையிலை இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. புகையிலை பொருட்களான சிகரெட், பீடி மற்றும் ஹான்ஸ் பயன்படுத்துவதால் உடலுக்கு பலவித நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதேபோல பீடி, சிகரெட்டுகளை பயன்படுத்துபவர்கள் மட்டுமின்றி, அவர்கள் வெளியே விடும் புகையை சுவாசிக்கும் மற்றவர்களுக்கும்வாய், நுரையீரல் புற்று நோயும், ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளது.

புகையிலை பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் விதமாக, மாவட்ட புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் சுகாதார துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து, கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் சரண்யாதேவி கூறியதாவது: ஒவ்வோர் ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன.

பொது இடங்களில் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புகைப் பழக்கத்துக்கு ஆளாக கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கோவை மாவட்டத்தில் 2040-க்கும் மேற்பட்ட அரசு, அரசுநிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளன. அதேபோல 145-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன.

பள்ளிகள், கல்லூரிகள் அருகில் 100 மீட்டருக்குள் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புகையிலை இல்லாத பள்ளி, கல்லூரிகள் என அறிவித்து சான்றிதழ் வழங்கி வருகிறோம். இதில் 1300 பள்ளிகள், 43 கல்லூரிகளுக்கு புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புகையிலை தடுப்பு திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 29 கிராமங்கள் புகையிலை இல்லாதகிராமங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, புகையிலைஇல்லாத கிராமங்களாக அறிவிக்கப்படும் கிராமங்களில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. கிராம மக்கள்யாரும் புகையிலை பொருட்களை பயன்படுத்தக்கூடாது என ஊராட்சிஅலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் காரமடை வட்டத்தில் சீங்குளி, எஸ்.எஸ்.குளம் வட்டத்தில் சாமநாயக்கன்பாளையம், காளிபாளையம், தொட்டிபாளையம், வெள்ளமடை, கோட்டைபாளையம், வாயம்பாளையம், லட்சுமி கார்டன்,மதுக்கரை வட்டத்தில் வழுக்குப்பாறை, புதுப்பதி, சின்னமாபதி, கிணத்துக்கடவு வட்டத்தில் குத்திரியாளம்பாளையம், முத்தூர், பொள்ளாச்சி வடக்கு வட்டத்தில் கிட்டசூரம்பாளையம், ஆனைமலை வட்டத்தில் தாத்தூர், அங்கலக்குறிச்சி, தொண்டாமுத்தூர் வட்டத்தில் மருதாங்கரை மேலபதி, மருத்தங்கரை கீழபதி, அன்னூர் வட்டத்தில் பசூர், பச்சாபாளையம், புகளூர், மூலப்பாளையம், சுல்தான்பேட்டை வட்டத்தில் போகம்பட்டி, கள்ளபாளையம், அய்யம்பாளையம், சின்னபுதூர் ஆகிய 29 கிராமங்கள் புகையிலை இல்லாதகிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x