Published : 13 May 2024 04:07 PM
Last Updated : 13 May 2024 04:07 PM

“தேவையற்ற மருத்துவ பரிசோதனைகளை தவிர்க்க வேண்டும்” - பத்மஸ்ரீ விருது பெற்ற கோவிந்தப்ப நாச்சியார்

பத்மஸ்ரீ விருதுடன் டாக்டர் கோவிந்தப்ப நாச்சியார்

மதுரை: “நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தால் பல பரிசோதனைகள் செய்கின்றனர். அவசியம் இருந்தால் மட்டுமே ஸ்கேன், லேப் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்ய வேண்டும். நோயாளிகளுக்கு தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகள் செய்வதை மருத்துவர்கள் தவிர்க்கலாம்” என்று பத்மஸ்ரீ விருது பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கோவிந்தப்ப நாச்சியார் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநரும், பிரபல கண் மருத்துவருமான டாக்டர் கோவிந்தப்ப நாச்சியாருக்கு, அவரது மருத்துவ சேவையை பாராட்டி, கடந்த 9-ம் தேதி டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பத்மஸ்ரீ விருதை அவருக்கு வழங்கி கவுரவித்தார். விருது பெற்று மதுரை திரும்பிய அவிந்த் கண் மருத்துவமனை இயக்குநர் கோவிந்தப்ப நாச்சியார் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பத்மஸ்ரீ விருது பெற்றது மிக பெருமையாக உள்ளது. இந்த விருது என்னுடைய தனிப்பட்ட உழைப்பு, சேவைக்காக கிடைக்கவில்லை. அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்களுடைய பிரதிநிதியாகதான் இந்த விருதை பெற்றதாக கருதுகிறேன்.

இந்த விருதை பெற்றது மூலம், அவர்களையும், இந்த நிறுவனத்தையும் நான் சரியாகதான் வழிநடத்திக் கொண்டிருக்கிறேன் எனக் கருதுகிறேன். இந்த மருத்துவமனை இயக்குநர்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைப்பது இது மூன்றாவது முறை. அரவிந்த் கண் மருத்துவமனையை தொடங்கிய என்னுடைய சகோதரர் ஜி.வெங்கிடசாமி, 1972-ம் ஆண்டிலேயே இந்த விருதை பெற்றுள்ளார். அப்போது அவர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தபோது சிறப்பாக பணிபுரிந்ததிற்காக கிடைத்தது. அதன்பிறகு எனது கணவருக்கு கிடைத்தது.

1976-ம் ஆண்டு சிறியளவில் 11 படுக்கை வசதியுடன் இந்த மருத்துவமனையை தொடங்கினோம். தற்போது 48 ஆண்டுகள் கழித்து 135 இடங்களில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு 15 கி.மீ., ஒரு இடத்தில் அரவிந்த் கண் மருத்துவமனை உள்ளது. ஏதோ ஒரு வகையில் இந்த மருத்துவனை ஊழியர்கள் நல்ல நோக்கத்துக்காக பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள். இன்று 6 ஆயிரம் ஊழியர்கள் இந்த மருத்துவமனையில் பணிபுரிகிறோம்.

45 சதவீதம் இலவச மருத்துவசேவை செய்கிறோம். அப்படியிருந்தும் சம்பாதிக்கிறோம். ஒரு நாளைக்கு நாங்கள் 15 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குதான் எங்கள் வெற்றிக்கான காரணமாகும். ஒவ்வொருவருக்கும் பார்வை கொடுக்க வேண்டும். அந்த பார்வை தரமாக இருக்க வேண்டும், நன்கொடை எக்காரணம் கொண்டும் வாங்கக்கூடாது என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். எங்களுக்கு மக்கள்தான் ஊக்கமாக இருக்கிறார்கள். என்னுடன் பலர் பத்மஸ்ரீ விருது பெற்றார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் பெற்றார்கள். ஆனால், நான் பலரின் உழைப்புக்கு ஒரு பிரதிநிதியாகதான் இந்த விருதை பெற்றுள்ளேன்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ யார் படித்தாலும் அவர்கள் எங்கள் அரவிந்த் மருத்துவமனையை பற்றி படித்தாக வேண்டும். எங்களை பற்றிய பாடத்திட்டம் அங்கு உள்ளது. உலகளவில் அதிகளவிலான கண் நோயாளிகளுக்கு எளிமையாக தரமாக சிகிச்சை கொடுத்து 5 ஆண்டுக்கு ஒரு இடத்தில் மருத்துமவனையை தொடங்கிய ஒரே நிறுவனம் நாங்களாகதான் இருக்க முடியும். இலவசமாகவும், ரூ.20, ரூ.50, ரூ.150 அடிப்படையில் சிகிச்சை வழங்குகிறோம். உலகத்திலே கண் மருத்துவமனைக்கு சிறந்த ஆராய்ச்சி நிலையம் வைத்துள்ளோம். இதுபோல் எங்கள் ஆரோ லேப் மூலம் உலகம் முழுவதும் 300 நாடுகளுக்கு கண் மருத்துவக்கருவிகளையும், கண் கண்ணாடிகளையும் ஏற்றுமதி செய்க்கிறோம்.

செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) தொழில்நுட்பத்தை அதிகளவில் எங்கள் மருத்துவமனையில் பயன்படுத்த தொடங்கியுள்ளோம். ஐ.டி தொழில்நுடப்த்தில் எங்கள் மருத்துவமனை தலைசிறந்ததாக திகழ்கிறது. ஒரு மருத்துவமனையில் வெளி நோயாளியாக ஒருமுறை பதிவு செய்தால் அந்த அடையாள அட்டையை கொண்டு தமிழகத்தின் எந்த கண் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெறக்கூடிய வசதி உள்ளது. கண் தெரியாதது, இறப்பை விட கொடுமையானது. அதனாலே இந்த சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகளவில் மருத்துவமனைகளை தொடங்கினோம்.

எங்களைபோல் பிற நிறுவனங்களும் கண் மருத்துவமனைகளை தொடங்கியதால் தற்போது கிராமங்கள், நகரங்கள் பராபட்சமில்லாமல் கண் தெரியாதவர்களை பார்ப்பதே அரிதாக உள்ளது. அந்தளவுக்கு கண் மருத்துவத்தில் இந்தியா தலைசிறந்து திகழ்கிறது. அதில் எங்கள் மருத்துவமனை முதல் இடத்தில் இருப்பது பெருமையாக உள்ளது. கண் மருத்துவத்தில் எதிர்காலத்தில் யார் யாருக்கு எந்த நோய் வரும், குடும்பத்தில் ஒரு வருக்கு ஒரு கண் நோய் வந்தால் மற்றவர்களுக்கு அந்த நோய் வருமா என்பதை அரிதியிட்டு சொல்ல முடியும். அந்தளவுக்கு கண் மருத்துவத்தில் அரவிந்த் கண் மருத்துவமனை சிறந்த விளங்கிறது.

எங்கள் ஊரில் பத்தாம் வகுப்பு, ப்ளஸ்-2 முடிந்தால் பெண்களை அந்த காலத்தில் பட்டாசு ஆலைகளுக்கு அழைத்து சென்றுவிடுவார்கள். தற்போது அதை உடைத்து அதுபோன்ற பெண்களுக்கு நாங்கள் வேலைவாய்ப்பு அளித்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி உள்ளோம். மருத்துவப்பயிற்சிக்காக அயல்நாடுகளுக்கு அழைத்து செல்கிறோம்.

பிளஸ் டூ படித்த பெண்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது. அதை நாங்கள் வழங்கி வருகிறோம். தற்போது எங்கள் மருத்துவமனையில் 85 சதவீதம் பெண்கள்தான் பணிபுரிகிறார்கள். தற்போது நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்றவுடனே ஸ்கேன், பல லேப் பரிசோதனைகளை மருத்துவர்கள் செய்து விடுகிறார்கள். மருத்துவர்கள், அவர்களுடைய பணி அனுபவ அறிவை (clinical knowledge) கொண்டே மருத்துவர்கள் 98 சதவீதம் நோய்களை கண்டறியலாம். அவசியம் இருந்தால் மட்டுமே ஸ்கேன், லேப் பரிசோதனைகளை செய்யலாம். நோயாளிகளுக்கு தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளை மருத்துவர்கள் தவிர்க்கலாம்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x