Last Updated : 13 Apr, 2018 11:10 AM

 

Published : 13 Apr 2018 11:10 AM
Last Updated : 13 Apr 2018 11:10 AM

காமன்வெல்த் போட்டிகள்: கெத்து காட்டிய தமிழன்!

ல சந்தர்ப்பங்களில் நம்பிக்கைதான் பலருக்கும் வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. காயத்தோடு கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த சதிஷ் சிவலிங்கம் பதக்கம் வெல்லவும் அளப்பறியா நம்பிகைத்தான் காரணமாக இருந்திருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற தேசிய பளு தூக்கும் போட்டியில் சதிஷ் பங்கேற்றபோது தொடையில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் முழுமையாகச் சரியாகாத நிலையில்தான் கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகள் வந்தன. காயமும் வலியும் சதிஷுக்கு அச்சமூட்ட, அதையும் தாண்டி போட்டியில் பங்கேற்றார். இப்போது தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியிருக்கிறார்.

உடலில் எங்கேயாவது வலி இருந்தால், பளு தூக்குவது பற்றி யோசித்துக்கூடப் பார்க்க முடியாது. அதுவும் தூக்கும் பளுவைத் தாங்கி நிற்க உதவும் காலில் காயம் என்றால், போட்டியில் பங்கேற்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. காயத்தோடு அவர் போட்டியை எப்படி எதிர்கொண்டார்?

“தேசிய பளு தூக்கும் போட்டியில் தொடையில் காயம் ஏற்பட்ட பிறகு, எனக்கு பதக்கம் கிடைக்கும் என்றெல்லாம் நினைக்கவில்லை. தொடையில் வலி கடுமையாக இருந்தது. கடுமையான பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால், மற்றவர்கள் எனக்குக் கொடுத்த நம்பிக்கைதான் பதக்கம் வெல்ல உதவியது” என காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற பிறகு கூறினார் சதிஷ்.

கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் பளு தூக்கும் ஸ்நாட்ச் பிரிவில் 144 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 173 கிலோ என ஒட்டுமொத்தமாக 317 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார் சதிஷ். கடந்த 2014-ம் ஆண்டில் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று அவர் தூக்கிய எடையைக் காட்டிலும் இப்போது அவர் தூக்கிய எடை சற்று குறைவுதான். கடந்த முறை அவர் ஸ்நாட்ச் பிரிவில் 149 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 179 கிலோ என மொத்தமாக 328 கிலோ எடையைத் தூக்கி பதக்கம் வென்றிருந்தார்.

சதிஷின் சொந்த ஊர் வேலூர். பளு தூக்கும் பயிற்சிகளுக்குப் புகழ்பெற்ற சத்துவாச்சாரியில்தான் இவரது வீடு உள்ளது. இவரது தந்தை சிவலிங்கம் முன்னாள் பளுத் தூக்கும் வீரர்தான். தேசிய அளவில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்றிருக்கிறார். மகனும் தன்னைப் போல பளு தூக்கும் வீரராக வேண்டும் என்ற ஆசையில் சத்துவாச்சாரியில் சாதாரண ஜிம்மில் எடைத் தூக்கப் பழக அனுப்பினார். அப்படி பழக ஆரம்பித்த சதிஷ் மாநிலம், தேசிய அளவிலானப் போட்டிகளைத் தாண்டி சர்வதேச அளவில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை வாழ்நாள் குறிக்கோளாக வைத்திருக்கும் சதிஷ், அதற்காகக் கடுமையாகப் பயிற்சியை மேற்கொண்டுவருகிறார். அந்தத் தருணத்துக்காக அவர் மட்டுமல்ல, நாடே காத்திருக்கிறது!

ஆதிக்கம்!

கடந்த சில ஆண்டுகளாகவே பளு தூக்கும் போட்டியில் சர்வதேச அளவில் இந்தியா வேகமாக முன்னேறிவருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியிலும் அது எதிரொலித்திருக்கிறது. பளு தூக்கும் போட்டியில் மட்டும் 9 பதக்கங்களை இந்தியா பெற்றிருக்கிறது.

சைக்கோம் மீராபாய் சானு, சஞ்சிதா சானு, சதிஷ் சிவலிங்கம், ரகலா வெங்கட் ராகுல், பூனம் யாதவ் ஆகியோர் தங்கப் பதக்கத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

குருராஜா பூஜாரி, பிரதீப் சிங் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும் தீபக் லாதர், விகாஷ் தாக்கூர் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார்கள்.

இதேபோல துப்பாக்கி சுடுதலிலும் இந்தியா கணிசமாகப் பதக்கம் வென்றிருக்கிறது. மனு பாகர், ஜித்து ராய், ஹீனா சித்து, ஸ்ரேயாஸி சிங் ஆகியோர் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றிருக்கிறார்கள்.

இதில் ஹீனா சித்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பிறகு ஒரு நாள் கழித்து 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.

மெஹுலி கோஸும் துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம் பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

ரவிக்குமார் , ஓம் பிரகாஷ் மித்தராவல், அபூர்வி சண்டேலா, அங்கூர் மிட்டல் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தனர். இதில் ஓம் பிரகாஷ் மித்தராவல் இருமுறை வெண்கலம் வென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x