Published : 08 May 2024 10:40 AM
Last Updated : 08 May 2024 10:40 AM

சிறுதானிய உணவு விற்பனையில் கலக்கும் பின்னலாடை டிசைனர் - வாழ்வை தொலைத்த இடத்தில் துளிர்த்த புதிய நம்பிக்கை!

திருப்பூர் மாநகரில் சிறுதானிய உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ள தாண்டவக்கோன்.

திருப்பூர்: கோடை வெயிலால் அனல்பறக்கும் திருப்பூர் மாநகரில் மதிய வேளைகளில் சிறுதானிய உணவுகளை வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விற்பனை செய்து வருகிறார் தாண்டவக்கோன் (56). பின்னலாடை நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றிய இவர், தற்போது சிறுதானிய உணவு விற்பனையில் அசத்தி வருகிறார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: எனது மனைவி ராஜேஸ்வரி. எனக்கு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இதில் மகள் இருதய லட்சுமி கடந்த 2015-ம் ஆண்டு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, மூளை காச நோயால் பாதிக்கப்பட்டார். துக்கத்தில் குடும்பமே நிலை குலைந்தது. பல்வேறு இடங்களில் சிகிச்சை எடுத்தபோதும், எனது மகளால் முழுமையாக இன்றுவரை நடமாட இயலவில்லை. இந்நிலையில் மருத்துவர்கள் அறிவுரைப்படி, சிறுதானிய உணவுகளை அவருக்கு கொடுத்து வந்தோம்.

தற்போது மகளின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கரோனா காலக்கட்டத்துக்கு பிறகு, நாம் சாப்பிடும் உணவு எவ்வளவு முக்கியம் என்பதை அனைவருமே உணர்ந்துள்ளோம். இந்த நிலையில் அனைவருக்குமான சத்தான உணவை வழங்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 8 மாதங்களாக சிறுதானிய உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ளேன்.

ராகி களி, சோளக்களி, உளுந்து புட்டு, ராகி புட்டு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி தோசைகள் மற்றும் இட்லி, கிச்சடி, சப்பாத்தி, உப்புமா, பணியாரம் என அனைத்து உணவு பதார்த்தங்களையும் சிறுதானியங்களில் செய்து விற்பனை செய்கிறேன். குறிப்பாக வரகு, சாமை, தினை தானியங்களில் தயாரித்து விற்பனை செய்யப்படும் பூரிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மட்டன் பிரியாணி தொடங்கி அனைத்து விதமான, வழக்கமான உணவுகளை சிறுதானியத்தில் செய்து விற்பனை செய்கிறோம்.

சிறு தானிய உணவு வகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், பின்னலாடை டிசைனர் பணியில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். உணவை மருந்தாக என் மகள் எடுத்துக்கொண்டதால், இன்று அவரது வாழ்வில் சிறு வெளிச்சம் தென்படுகிறது. அனைத்தும் நஞ்சானால் என்ன செய்வது? என்ற எண்ணம்தான், பின்னலாடைத் துறையில் இருந்து சிறுதானிய விற்பனைக்கு நான் மாற முக்கியக் காரணம்.

திருப்பூர் மாநகரில் 500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கடந்த 8 மாதத்தில் கிடைத்துள்ளனர். இதில் நாள்தோறும் 80 முதல் 100 பேர் வரை சிறு தானிய உணவு வகைகளை தொடர்ந்து ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். தொலைத்த இடத்தில் தேடு என்பார்கள். இன்றைக்கு நாங்கள் வாழ்வை தொலைத்த இடத்தில் எங்களுக்கான புதிய நம்பிக்கை சிறு தானியங்களால் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x