Last Updated : 06 May, 2024 04:27 PM

 

Published : 06 May 2024 04:27 PM
Last Updated : 06 May 2024 04:27 PM

தேர்தல் ஏற்படுத்திய மாற்றம் - ‘டோக்கன்’ முறைக்கு மாறிய கிராமத்து டீ கடைகள்!

ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு டீ கடையில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு

ஆண்டிபட்டி: தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அலைமோதியதால் தேனி மாவட்ட கிராமத்து டீ கடைகளில் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முடிந்த பின்பும் இந்த நடைமுறை பல கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து சிறு வர்த்தகம் அதிகரித்தது. குறிப்பாக டீ, ஹோட்டல், பூ, ஒலிபெருக்கி, வாடகை வாகனங்கள் உள்ளிட்ட தொழில்கள் களைகட்டின. பொதுவாக கிராமத்து டீ கடைகளுக்கு உள்ளூர் ஆட்களே வருவதால் நகரங்களைப் போல முன்பணம் பெற்று டோக்கன் வழங்கி டீ தருவதில்லை. டீ, வடை போன்றவற்றை சாப்பிட்ட பின்பே, அதற்கான பணத்தை செலுத்துவர்.

இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்துக்கு வெளியூர் கட்சித் தொண்டர்கள் அதிக அளவில் கிராமப் புறங்களுக்கு வந்தனர். நெரிசலை சமாளிக்கவும், சரியான பணப் பரிவர்த்தனைக்காகவும் டோக்கன் மூலம் டீ, வடை மற்றும் உணவு வகைகள் அளிக்கப்பட்டன. இதனால் எவ்வளவு கூட்டம் வந்தாலும் பணம் விடுபடாமல் வியாபாரம் நடைபெற்றன.

சிவசாமி

இந்நிலையில் சமீபத்தில் பிரச்சாரம் ஓய்ந்து வாக்குப்பதிவும் முடிந்துவிட்டது. இருப்பினும் பல கிராமக் கடைகளில் டோக்கன் முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. காலங்காலமாக நம்பிக்கை அடிப்படையிலான வர்த்தகமாக இருந்து வந்த கிராமத்து டீ கடைகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் உள்ளூர்வாசிகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கணேசபுரத்தைச் சேர்ந்த டீ கடைக்காரர் சிவசாமி கூறுகையில், தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்துக்காக கூட்டம், கூட்டமாக வெளி யூர் ஆட்கள் அதிக அளவில் வந்தனர். பலரும் சரிவர பணம் தராததால் ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட்டது. எனவே, நகரங்களைப் போல் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தினோம். மேலும் விற்பனை பொருட்களையும், அதற்கான பணத்தையும் சரி பார்க்க எளிதாக இருந்தது. நடைமுறைக்கு சுலபமாக இருந்ததால் இந்த பழக்கத்தை தொடர்ந்து கொண் டிருக்கிறோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x