Published : 05 May 2024 11:18 AM
Last Updated : 05 May 2024 11:18 AM
கோவை: கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. கத்திரி வெயில் காலத்தில் அதிகரிக்கும் வெயில் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் ( வெப்ப பக்கவாதம் ) ஏற்படும் சூழலும், அதனால் உயிரிழப்புகளும் நிகழும் அபாயமும் உள்ளது.
ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் முன்னாள் இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்திர வேல் கூறியதாவது: பொதுவாக ஹீட் ஸ்ட்ரோக், உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து வெப்ப நிலை அதிகரிப்பதால் ஏற்படக்கூடியது. உடல் சூடு 40 டிகிரிக்கு மேல் அதிகரிக்கும். நீர்ச்சத்து குறைந்து, சோர்வு, தளர்வு, தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஆகியவை வரும். மயக்கம் வராமல் தற்காத்துக்கொள்ள வேண்டும்.
வெளி இடங்களில் பணிபுரியும் போது உடல் சோர்வு, தளர்வு இருந்தால் நீர் அருந்தி காற்றோட்டமான இடத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். தலை சுற்றல் அறிகுறி இருந்தால் ஓய்வு எடுக்க வேண்டும். அதையும் மீறி தொடர்ந்து வேலை செய்யும்போது மயக்கம் ஏற்பட்டு உடலில் உள்ள உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும். பகல் நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்லக் கூடாது.
குடை எடுத்துச் செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்த்து கார், ஆட்டோக்களில் செல்ல வேண்டும்.குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதர உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதன் மூலம் ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார்.
பிறந்த குழந்தைகள் முதல் சிறுவர்கள் மற்றும் தாய்மார்கள் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து, குழந்தைகள் நல மருத்துவர் சரண்யா கூறியதாவது: பிறந்த குழந்தைகளுக்கு உடல் வெப்பநிலை அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குழந்தையின் உடலில் ஈரத் துணி கொண்டு துடைத்து விட வேண்டும். வெயிலில் நீர் சத்து குறையும் என்பதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை அதிகப்படுத்த வேண்டும்.
பருத்தியால் நெய்த துணிகளை அணிய வேண்டும். நாப்கின் போன்றவைகளை சிறுநீர் கழித்தவுடன் கழற்றி விட வேண்டும். குழந்தைகளின் அறையை நல்ல காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். காலை 10 மணி முதல் 4 மணி வரை வெயிலில் விளையாடாமல் பார்த்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் இருக்க நார்ச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகள், இளநீர், மோர் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்கும்போது சிறுநீர் தொற்றும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறுவர்கள் நாளொன்றுக்கு 1 லிட்டர் அளவு நீர் அருந்த வேண்டும். வெயிலில் விளையாடும்போது நீர்ச்சத்து குறையும் என்பதால் தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும். சின்னம்மை வராமல் தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். குடிநீரால் பரவும் ஹெபடைடீஸ் ஏ வராமல் தடுத்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் இரு வேளை குளிக்க வைக்க வேண்டும். வியர்க்குரு வராமல் பார்த்து கொள்ள வேண்டும். பவுடர் வியர்வை சுரப்பிகளை பாதிக்கும். பகலில் வெளியே செல்லும் போது சன் கிரீம்களை பயன்படுத்தலாம். உடல் எடை குறைந்த குழந்தைகளுக்கு போதிய தாய்ப் பால் ஊட்ட வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT