Published : 03 May 2024 02:59 PM
Last Updated : 03 May 2024 02:59 PM
கோடையில் தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். மூன்றில் இருந்து ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். ஐஸ் தண்ணீரைவிட, மண் பானைத் தண்ணீர் நல்லது.
எண்ணெயில் பொரித்த, வறுத்த, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்ஸா, ஐஸ்கிரீம் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. அதேபோல், சூடான, காரமான, மசாலா கலந்த, உப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளிக்கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவுகள்.
மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்பூசணி சூப், தக்காளி சூப் வகைகளைச் சாப்பிடலாம். திராட்சை, சாத்துக்குடி ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, முலாம் பழம், ஆப்பிள் போன்றவற்றின் பழச்சாறுகளையும் அருந்தலாம். நுங்கு, கிர்ணி, கொய்யா போன்றவையும் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும்.
காபி, தேநீர் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, இளநீர், நீர்மோர், நன்னாரி சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம்.
இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, சுற்றுச் சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், உடலில் நீரிழப் பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைகின்றன.
கோடைக் காலத்தில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.
பகலில் வெளியில் செல்ல வேண்டியது அவசியம் ஏற்பட்டால், தலைக்குத் தொப்பி போட்டுக்கொள்ள வேண்டும். அல்லது குடை கொண்டு செல்ல வேண்டும். கண்களுக்குச் சூரியக் கண்ணாடி அணிந்துகொள்ளலாம். சருமத்தில் ‘சன் ஸ்கிரீன் லோஷ’னைப் பூசிக்கொள்ளலாம்.
கைவசம் சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். காற்றோட்டமான கதர், பருத்தி ஆடைகள் கோடைக் காலத்துக்கு ஏற்றவை. இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம்.
ஒவ்வொரு வருடமும் அதிகரித்துவரும் வெயில் ஒரு சவால்தான். ஆனால், அதில் இருக்கும் ஆபத்துகளை முழுமையாகப் புரிந்துகொண்டால், அதன் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். நம் ஆரோக்கியம் நம் கையில்!
- கு.கணேசன், பொதுநல மருத்துவர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT