Published : 02 May 2024 05:43 AM
Last Updated : 02 May 2024 05:43 AM

பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் இன்பா: யுபிஎஸ்சி தேர்வில் விடாமுயற்சியுடன் 3-வது முறை வெற்றி

சென்னை:மத்திய அரசின் குடிமைப் பணி தேர்வில் விடாமுயற்சியுடன் மூன்றாவது முறையாக பங்கேற்ற பீடி சுற்றும் தொழிலாளியின் மகள்வெற்றிபெற்று சாதனை படைத்தார்.

இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 95 பணியிடங்களுக்கு குரூப்-1தேர்வுகளுக்கான அறிவிப்பு 2022-ம் ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது. முதல்நிலைத் தேர்வு 2022-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 2023 ஏப்ரலில் வெளியானது. தொடர்ந்து, குரூப்-1 முதன்மை தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டன. இதனை 2,113 பேர் எழுதினர். இதில் 90 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான, நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றுத் தேர்ச்சி பெற்றவராவார். இம்முறை குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்றவர்களில் பலர் மிகவும் ஏழ்மையான நிலையில் தனது சொந்த முயற்சியில் வீட்டில் இருந்தே படித்து வெற்றி பெற்றுள்ளனர் எனும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அதேபோல், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளி ஒருவரின் மகள் எஸ்.இன்பா, மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏழ்மையான ஒரு பீடித் தொழிலாளியின் மகள். இவர் பொருளாதார வசதி இல்லாததால், வீட்டில் இருந்தே படித்துள்ளார்.

இவர் ஏற்கெனவே இரண்டு முறை மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. எனினும், இன்பா விடாமுயற்சியுடன் மூன்றாவது முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 851-வது இடத்தை பெற்றுள்ளார்.

இன்பா 'நான் முதல்வன் திட்டத்தின்' மூலம் மாதம் ரூ.7,500 உதவித்தொகை பெற்று இத்தேர்வுக்கு படித்து வந்தார். 2023-ம் ஆண்டு மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வின் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து மாதம் ரூ.25,000 உதவித்தொகை பெற்றார். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிடைத்த உதவித் தொகையால் பொருளாதார தேவைப் பற்றிய கவலையின்றி இன்பா முழு கவனத்துடன் இத்தேர்வுக்காக படித்து வெற்றி பெற முடிந்தது.

படிப்புக்கு ஏழ்மை ஒரு தடையில்லை. முயன்றால் படித்து முன்னேறலாம். வெற்றி முகட்டைத் தொடலாம் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துவதாக இன்பாவின் வாழ்க்கையும், அவரது விடாமுயற்சியும் வழிகாட்டுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x