Published : 01 May 2024 11:28 AM
Last Updated : 01 May 2024 11:28 AM
மதுரை: மதுரை நகர்ப்பகுதியில் ஒலி பெருக்கி மூலம் முதியவர் ஒருவர், மக்கள் குடிப்பதற்காக சாலையோரங்களில் வசிப்போர் தங்கள் வீட்டின் முன் பாத்திரங்களில் குடிநீர் வைக்கவும், பகல் நேரத்தில் வீட்டை விட்டு முதியோர், குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு உரக்கச் சொல்லி விழிப்புணர்வு செய்து வருகிறார்.
மதுரை பேச்சியம்மன் படித்துறை கீழ அண்ணா தோப்பு தெருவைச் சேர்ந்த இல.அமுதன் ( 67 ) என்பவர், தினமும் தானியங்கி ஒலிபெருக்கியை கொண்டு நகர வீதிகளில் கோடை காலத்தில் தமிழக அரசு கடைபிடிக்க கூறியுள்ள அறிவுரைகளை எடுத்துச் சொல்லி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். காலை, மாலை நேரங்களில் அவர் வசிக்கும் இருப்பிடங்கள் மட்டுமல்லாது, மக்கள் அதிகமாக வந்து செல்லும் மீனாட்சி அம்மன் கோயில் வீதிகள், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒலி பெருக்கியில் இந்த விழிப்புணர்வை தொடர்ந்து செய்து வருகிறார்.
தற்போது வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் பகல் பொழுதில் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் வெளியே வரவேண்டாம் என்றும், வீடுகள் முன் மக்கள் குடிப்பதற்கு குடிநீர் வைக்கவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகிறார்.
இது குறித்து அமுதன் கூறியதாவது: சமீபகாலத்தில் இந்த ஆண்டுதான் மதுரையில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீர் பற்றாக்குறையும் உள்ளது. கோடை வெயிலில் பொது இடங்களில் குடிக்க தண்ணீர் இல்லாமல் முதியவர்கள், சுமையுடன் மிதி வண்டிகளை ஓட்டுவோர், தலைச் சுமை வியாபாரிகள் மயங்கி விழுவதை பார்த்திருக்கிறேன். வெளி இடங்களுக்கு வரும் வசதியானவர்கள் பாட்டில் தண்ணீரை வாங்கியும், இளநீர், குளிர் பானங்களை பருகியும் இந்த கோடை வெயிலின் வெப்பத்தை சமாளித்து விடுவார்கள்.
ஆனால் அடித்தட்டு மக்கள் தண்ணீர் கொண்டு வராமல், செல்லும் இடங்களில் குடித்து விடலாம் என வந்து விடுகிறார்கள். எனவே அவர்கள் பயன்பெறும் வகையில் சாலையோரமாக வசிப்பவர்கள் தங்கள் வீட்டின் வாசல்களில் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைக்கும்படி கேட்டு வருகிறேன். அதுபோல் வியாபாரிகள், தங்கள் கடைகளின் முன்பு குடிநீர் பானைகள் வைக்கவும் விழிப்புணர்வு செய்கிறேன். நான் சொல்வதைக் கேட்கும் 100 பேரில் 50 பேர் அதை பின்பற்றினாலே கோடை வெயிலில் வெளியே வருவோர் பயனடைவர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT