Published : 01 May 2024 07:46 AM
Last Updated : 01 May 2024 07:46 AM

இந்தப் பெட்டிக் கடையால்தான் டாக்டர் ஆனேன்: தந்தையின் ஓய்வு குறித்து மகன் நெகிழ்ச்சிப் பதிவு

தன் தந்தையுடன் வாஹித் மூமின்

அவுரங்காபாத்: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் வாஹித் மூமின். மருத்துவராக பணிபுரிகிறார். கடந்த 33 ஆண்டுகளாக பெட்டிக் கடை நடத்தி வந்த அவரது தந்தை, தற்போது அந்தக் கடைக்கு விடைகொடுத்து விட்டு ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளார்.

இந்தத் தருணத்தில், அந்தப் பெட்டிக்கடையை தன் தந்தை எப்படி நடத்தி வந்தார், அதன் வழியே எப்படி குடும்பம் மேம் பட்டது என்பன குறித்து வாஹித் மூமின் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

“என்னுடைய அப்பா பெட்டிக் கடையிலிருந்து ஓய்வு பெறுகிறார். மனதளவில் அவர் அந்த ஓய்வுக்கு தயாராகவில்லை. சிறிய வாடகை இடத்தில் தொடங்கப்பட்ட இந்தக் கடையை அவர் கடந்த 33 ஆண்டுகளாக நடத்தி வந்தார். என்னுடைய அப்பா, அம்மாவின் கடின உழைப்பாலேயே என்னால் கல்வி பெற முடிந்தது. எந்தப் பொருளாதார நெருக்கடியிலும் சிக்காமல், எங்கும் கடன் வாங்காமல் இந்தக் கடை மூலம் வந்த வருமானத்தை கொண்டு அவர்கள் என்னை படிக்க வைத்தனர்.

என் அப்பா கடையை காலை 9 மணிக்கு திறப்பார். இரவு 11 மணிக்குத்தான் மூடுவார். வருடத்துக்கு ரம்ஜான் மற்றும் பக்ரீத் ஆகிய 2 நாட்கள் மட்டும்தான் விடுமுறை. கடையை நடத்துவதற்கு என் அம்மா உறுதுணையாக இருந்தார்.என்னுடைய 9-வது வகுப்பு வரை பள்ளி முடிந்ததும் மாலை கடைக்கு வந்து வியாபாரத்தைக் கவனித்துக் கொள்வேன்.

இந்தக் கடையிலிருந்து அப்பா ஓய்வு பெறுவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஒருவகையில் வருத்தமாகவும் இருக்கிறது. ஏனென்றால், அப்பா இந்த வேலையை மிகவும் பிடித்து செய்தார். அவரால், மனதளவில் இந்த வேலையிலிருந்து விலக முடியவில்லை.

அப்பா இனி ஓய்வு நேரத்தை உற்சாகமாக செலவிடுவார் என்றும் அவரது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவார் என்றும் நம்புகிறேன்” என்று பதிவிட்டு உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x