Published : 01 May 2024 04:08 AM
Last Updated : 01 May 2024 04:08 AM
காரைக்குடி: காரைக்குடி அருகே புலிக்கு மரியாதை செலுத்தும் விழா நடந்தது. இதையொட்டி புலி, பூரான், எலி சிலைகளை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
காரைக்குடி அருகே காயவயல், கலிபுலி, மனப்பட்டி வனப்பகுதிகளில் பழங்காலத்தில் ஏராளமான புலிகள் இருந்தன. அவற்றிடம் இருந்து தங்களை பாதுகாக்க அக்கிராம மக்கள் புலிக்கு மரியாதை செலுத்தும் விழாவை பன்னெடுங்காலமாக நடத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் புலி சிலைகளை செய்து மாயாண்டி அய்யனார் கோயிலில் வைக்கின்றனர். இவ்விழாவை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்.23-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது.
மேலும் இவ்விழாவுக்காக ஒரு மாதத்துக்கு முன்பே புலி சிலைகளை செய்ய பிடிமண்ணை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தாண்டு புலிக் குத்தி கிராமத்தில் 44 புலி சிலைகள் செய்யப்பட்டன. நேற்று அங்கிருந்து புலி சிலைகளை ஆண்கள் சுமந்தபடி ஊர்வலமாக மணப்பட்டி வழியாக 5 கி.மீ. தூரத்தில் உள்ள கலிபுலி மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றனர். மேலும் விஷ ஜந்துகளிடம் இருந்து தங்களை பாதுகாக்கவும், குழந்தை வரம் வேண்டியும், கால்நடை பெருக்கத்துக் காகவும் பெண்கள் நேர்த்திக்கடனாக பூரான், எலி, கன்றுக்குட்டி, குழந்தை சிலைகளை எடுத்துச் சென்றனர்.
செல்லும் வழிகளில் சிலைகளுக்கு ஆங்காங்கே ஆரத்தி எடுத்து பெண்கள் வழிபாடு நடத்தினர். பின்னர் சிலைகள் மாரியம்மன் கோயிலில் வைக்கப் பட்டன. தொடர்ந்து இரவு முழுவதும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை புலி, பூரான், எலி, கன்றுக்குட்டி சிலைகளை கலி புலி மாயாண்டி அய்யனார் கோயிலில் வைக்க உள்ளனர். அதைத் தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT