Published : 30 Apr 2024 05:44 AM
Last Updated : 30 Apr 2024 05:44 AM
சின்னமனூர்: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (60). பட்டறைத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள், 2 மகன்கள் உள்ளனர்.
வேளாண் கருவிகளான மண்வெட்டி, அரிவாள், களைக்கொத்து, கோடாரி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களான அரிவாள்மனை,தோசை சட்டி, பனியாரச் சட்டி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் ஈஸ்வரன். இதற்காக ஊர் எல்லையில் பட்டறை அமைத்துள்ளார்.
தொடக்கத்தில் தான் தயாரித்த பொருட்களை பேருந்தில் கொண்டுசென்று, கிராமங்களில் விற்பனை செய்துவந்தார். பின்னர் 3 சக்கர சைக்கிளில் இவற்றைக் கொண்டு சென்று விற்பனை செய்தார். பலஊர்களுக்கும் செல்வது சிரமமாகஇருந்ததால், மூன்று சக்கர சைக்கிளில் இரு சக்கர வாகனத்தின் இன்ஜினைப் பொருத்தி, அதைப் பயன்படுத்த தொடங்கினார். அதில் கிடைத்த அனுபவத்தால், சொந்தமாக சிறு ரக வாகனத்தை தயாரிக்கும் எண்ணம் இவருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து ‘மினி ஜீப்’ தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக பழைய ஸ்டீல் கட்டில்களை வாங்கி தகடாக மாற்றி, மினி ஜீப்பின் சுற்றுப்புறப் பகுதியை உருவாக்கி உள்ளார். பின்னர், பழைய ஸ்கூட்டரின் இன்ஜினை தனியே எடுத்து, அதில் பொருத்திஉள்ளார். தொடர்ந்து, பழைய இரும்புக் கடையில் இருந்து ஸ்டியரிங், டயர் போன்றவற்றை ஒவ்வொன்றாக வாங்கி, மினி ஜீப்பை வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து ஈஸ்வரன் கூறும்போது, “இந்த மினி ஜீப் லிட்டருக்கு 30 கி.மீ. தொலைவு செல்லும். சின்னமனூர் உள்ளிட்ட சிறு நகரங்களுக்கு இதில் செல்லும்போது பலரும் புகைப்படம் எடுத்துக் கொள்வதுடன்,சமூக வலைதளத்திலும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வண்டியை வடிவமைக்க ரூ.80 ஆயிரம் செலவாகி உள்ளது. 15 நாட்களில் செய்து முடித்தேன். ஸ்கூட்டர் இன்ஜின்என்பதால், இந்த மினி ஜீப்புக்குகியர் கிடையாது. ஆக்ஸிலேட்டர் மற்றும் பிரேக் மட்டும்தான் உள்ளது.இதில் 4 பேர் செல்லலாம். அல்லது250 கிலோ வரையிலான சுமைகளை இதில் ஏற்றிச் செல்லலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT