Published : 24 Apr 2024 04:04 AM
Last Updated : 24 Apr 2024 04:04 AM
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் மாரியூரில் உள்ள பவளநிறவல்லி அம்பாள் சமேத பூவேந்தியநாதர் கோயிலில் திருவிளையாடல் திருவிழாவை முன்னிட்டு வலை வீசும் படலம் நேற்று நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடற்கரையில் அமைந்துள்ள மாரியூரில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ் தானத்துக்கு பாத்தியப்பட்ட பவளநிறவல்லி அம்பாள் சமேத பூவேந்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் திருவிளையாடல் திருவிழா ஏப்ரல் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனையும், உற்சவ மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றன.
சித்திரை பவுர்ணமியான நேற்று காலையில் மாரியூர் கடற்கரையில் திருவிளையாடல் புராணத்தில் மீனவ பெண்ணாக சாபம் பெற்ற பார்வதி தேவியை சாப விமோசனம் அளிக்க சிவபெருமான் மீனவ வேடம் பூண்டு கடலில் வலைவீசி சுறா மீனை அடக்கி, பார்வதி தேவியை மணம் முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 8 மணியளவில் மாரியூர் பவளநிறவல்லி அம்பாள் சமேத பூவேந்தியநாதர் கோயிலிலிருந்து பூவேந்திய நாதர் புறப்பட்டு மன்னார் வளைகுடா கடலில் 9 மணிக்கு மேல் வலை வீசும் படலம் நடைபெற்றது.
தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, பலர் மொய்ப்பணம் எழுதினர். மாலை சுவாமி-அம்பாள் மணக்கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் அத்திமரத்து விநாயகர் கோயிலிலிருந்து தேங்காய், பழம் தாம்பூலத்துடன் பட்டு சேலை, பட்டு துண்டு, வேஷ்டி, திருமாங்கல்யம், ஆபரணங்களுடன் மணவீட்டார் அழைப்பு நடைபெற்றது. பின்னர் அம்பாளுக்கு பொன்ஊஞ்சல் வைபவம் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT