Published : 24 Apr 2024 04:18 AM
Last Updated : 24 Apr 2024 04:18 AM

தென்னை ஈர்க்கு ரூ.10-க்கு விற்பனை: விலை சரிவால் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

குமரி மாவட்டத்தில் தென்னை ஓலையில் இருநது பிரி்த்தெடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் ஈர்க்குகள். ( வலது ) தென்னை ஈர்க்கு கொணடு தயாரிக்கப்பட்ட துடைப்பங்கள்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை ஈர்க்கு விலை கிலோ 10 ரூபாயாக சரிந்தது. இதனால் ஆயிரக்கணக்கான கிராமப் புற ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பரப்பளவில் தென்னையும், ரப்பரும் பயிரிடப்பட்டுள்ளன. இரு விவசாயத்தை நம்பி பல்லாயிரக் கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். இவற்றில் தென்னையில் இருந்து கிடைக்கும்தேங்காய், இளநீர் மட்டுமின்றி, அதன் ஓலையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஈர்க்கு, தென்னை நெற்று, தென்னை ஓலை ஆகியவையும் மதிப்பு கூட்டப்பட்டு, பல்வேறு பொருட்களாக தயாராகின்றன.

தென்னை ஈர்க்கில் இருந்து, வீடுகளை சுத்தப்படுத்த உதவும் துடைப்பங்கள் உற்பத்தி செய்வதில் குமரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. சமீபகாலமாக சீனா, ஜப்பான்,மலேசியா, சிங்கப்பூர், மற்றும் அரபுநாடுகளில் தென்னை ஈர்க்கின் தேவை அதிகரித்து உள்ளது. ஈர்க்கிலிருந்து அழகு பொருட்கள் தயார் செய்வது, வீடு, அலுவலகங்களை மிதமான தட்பவெப்பம் நிலவும் வகையில் அறைகளில் ஈர்க்கினால் அழகுபடுத்துவது மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.

இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து மாதம் 300 டன்னுக்கு மேல் கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்கு ஈர்க்கு அனுப்ப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி, ஆசாரிபள்ளம், திட்டுவிளை, தக்கலை, கருங்கல், குளச்சல், குலசேகரம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழை மக்கள், தென்னையில் இருந்து விழும் ஓலைகளை விலைக்கு வாங்கி அதிலிருந்து ஈர்க்கை பிரித்தெடுத்து விற்பனை செய்து வந்தனர். ஒரு கிலோ ஈர்க்கு வழக்கமாக ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது.

அதாவது, தேங்காய்க்கான விலையை விட சில நேரம் ஈர்க்கின் விலை அதிகமாக இருக்கும். இதனால் தினமும் பெண்கள் வீட்டில் இருந்தவாறே 15 கிலோ வரை ஈர்க்குகள் எடுத்து விற்பனை செய்து வந்தனர். இது ஏழை தொழிலாளர்கள், பெண்களுக்கு நல்ல வாழ்வாதாரமாக இருந்து வந்தது. தற்போது கோடை காலம் என்பதால் அதிகளவில் தென்னை ஓலைகள் உதிர்ந்து தேக்கம் அடைந்து வருகின்றன. வழக்கத்தை விட 4 மடங்கு அதிகமாக ஈர்க்கு கிடைக்கிறது.

இதனால் ஈர்க்கின் விலை கடந்த ஒரு மாதமாக கிலோ 10 ரூபாயாக குறைந்துள்ளதால், தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஈர்க்கை ஓலையில் இருந்து பிரித்தெடுக்கும் செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது. இதனால், ஈர்க்குகள் எடுக்காமல் ஓலைகள் தேக்க மடைந்துள்ளன. ஈர்க்கை பிரித்து பயன்பெற்று வந்தோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இனி கோடை காலம் முடிந்த பின்னர் மழைக் காலத்தில் ஓலைகளுக்கு தட்டுப்பாடு நிலவும். அப்போதுதான் ஈர்க்கின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x