Published : 22 Apr 2024 05:43 AM
Last Updated : 22 Apr 2024 05:43 AM

குஜராத்தில் கழுதை பண்ணை வைத்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் சோலங்கி

சோலங்கியின் கழுதை பண்ணை

அகமதாபாத்: பொதிகளை சுமப்பதுதான் கழுதைகளின் பணி என்ற பழங்கால கதையை உடைத்து, அவற்றின் பாலை விற்று மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கிறார் ஒருவர்.

குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த திர்ரன் சோலங்கி தனது கிராமத்தில் கழுதைப் பண்ணை வைத்துள்ளார். அதில் இப்போது 42 கழுதைகள் உள்ளன. ஒரு லிட்டர் கழுதை பால் சுமார் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. இதன் மூலம் மாதந்தோறும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கிறார். இதுகுறித்து சோலங்கி கூறியதாவது:

நான் அரசு பணியில் சேர முயற்சி செய்தேன். ஆனால் தனியார் நிறுவனத்தில்தான் வேலை கிடைத்தது. இதன்மூலம் கிடைத்த சம்பளம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லை. அப்போது கழுதை வளர்ப்பு குறித்து கேள்விப்பட்டேன். இதுபற்றிய தகவலை திரட்டிக்கொண்டு என் சொந்த கிராமத்தில் ரூ.22 லட்சம் முதலீட்டில் 20 கழுதைகளுடன் ஒரு பண்ணையை நிறுவினேன். இப்போது என்னிடம் 42 கழுதைகள் உள்ளன.

குஜராத்தில் கழுதை பாலுக்கான தேவை அவ்வளவாக இல்லை. முதல் 5 மாதத்தில் லாபம் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் தென்னிந்தியாவில் கழுதை பாலுக்கு தேவை இருப்பதை உணர்ந்து, அங்குள்ள சில நிறுவனங்களை அணுகி கழுதை பாலுக்கான ஆர்டர் பெற்றேன்.

இப்போது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறேன். குறிப்பாக சில அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அனுப்பி வருகிறேன். அந்நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் இந்த பாலை பயன்படுத்துகின்றன.

ஒரு லிட்டர் பால் ரூ.5 ஆயிரம்முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. கழுதை பாலைபிரீஸர்களில் வைத்து பாதுகாக்கலாம். பாலை உலர வைத்து தூள் வடிவிலும் விற்பனை செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கழுதைப் பால் நோய் எதிர்ப்பு சக்தி உட்பட பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. மனித பாலுக்கு நிகரான குணம் கொண்ட இந்த பால் பழங்காலத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. எகிப்து ராணி கிளியோபட்ரா குளிப்பதற்காக கழுதைப் பாலை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், கல்லீரல், மூக்கில் ரத்தம் வடிதல், விஷமுறிவு, தொற்று நோய்கள் மற்றும் காய்ச்சல் குணமாக, கிரேக்க நாட்டின் மருத்துவர் ஹிப்போகிரேட்ஸ் கழுதைப் பாலை பரிந்துரை செய்தார் என வரலாறு கூறுகிறது. இவ்வளவு பலன்கள் இருந்தும் கழுதை பால் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் அதன் விலை அதிகமாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x