Published : 04 Apr 2024 04:02 AM
Last Updated : 04 Apr 2024 04:02 AM

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் நீரிணையை நீந்தி கடந்த சென்னை சிறுவர், சிறுமி

தனுஷ்கோடி அரிச்சல்முனையில் அரவிந்த் தருண் ஸ்ரீ, தாரகை ஆராதனா, நிஷ்விக் ஆகியோரை வரவேற்ற கடலோர படை மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தினர்.

ராமேசுவரம்: சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமி உட்பட மூவர் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலான பாக் ஜலசந்தி கடலை 11 மணி 30 நிமிடத்தில் நீந்தி சாதனை படைத்தனர்.

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வி.எஸ். குமார் ஆனந்தன். நீச்சல் வீரரான இவர் 1971-ம் ஆண்டு தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் தலைமன்னாருக்கு பாக் நீரிணைக் கடலை முதன் முறையாக நீந்திக் கடந்து சாதனை படைத்தார். 28.3.2019-ல் தேனியைச் சேர்ந்த ஆர்.ஜெய் ஜஸ்வந்த் தனது 10 வயதில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணைக் கடலை நீந்திக் கடந்தார்.

இதுவே மிகக் குறைந்த வயதில் பாக் நீரிணைக் கடலை நீந்தி கடந்த சாதனையாகும். இந்நிலையில் சென்னை ஓஎம்ஆர் காரப்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் தருண் ஸ்ரீ ( 44 ) இவர் பிரபல ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர். இவர் தானும், ஒன்பதரை வயதான அவரது மகள் தாரகை ஆராதனா, தனது தங்கையும் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் கண்காணிப்பாளளர் ஹரி கிரண் பிரசாத்தின் ஏழரை வயதான மகன் நிஷ்விக் ஆகிய மூவரும் இலங்கையிலுள்ள தலை மன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணைக் கடற்பகுதியை நீந்தி கடக்க முடிவு செய்தனர்.

இதற்காக இந்திய வெளியுறவுத் துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு அனுமதி கோரி இருந்தனர். இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் ராமேசுவரத்திலிருந்து இரு படகுகளில் நேற்று முன்தினம் மதியம் தலைமன்னாருக்குப் புறப் பட்டுச் சென்றனர். தலைமன்னாரில் நேற்று அதிகாலை 4 மணிக்கு அரவிந்த் தருண் ஸ்ரீ, தாரகை ஆராதனா, நிஷ்விக் ஆகிய மூவரும் நீந்தத் தொடங்கி பிற்பகல் 3.30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனையை வந்தடைந்தனர். மூவருக்கும் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தினர், இந்திய கடலோரக் காவல் படையினர் உற்சாக வர வேற்பு அளித்தனர்.

இது குறித்து அரவிந்த் தருண் ஸ்ரீ செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடல் மாசுபடுவதைத் தடுக்க வேண்டும். அதற்கு கடலை பிளாஸ்டிக் கிலிருந்து காப்பாற்ற வேண்டும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குடும்பமாக பாக் நீரிணைக் கடலை நீந்தி கடந்துள்ளோம். கடலில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் திட்டமிட்டதைவிட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டோம், என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x