Published : 02 Apr 2024 05:48 AM
Last Updated : 02 Apr 2024 05:48 AM

அவன் கடவுளின் குழந்தை என்றால் நான்... | ஏப்ரல் 2: உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

கோப்புப்படம்

எஸ்.சாதனா

புதிய வகுப்பின் முதல் நாளில் ஆசிரியை ஒவ்வொருவரையும் தங்களை தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார். நான் விரும்பும் புத்தகங்கள், திரைப்படங்கள், எதிர்காலத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்கிற எனது லட்சியம் முதற்கொண்டு பலவற்றை உற்சாகமாக எடுத்துச் சொன்னேன். ஆசிரியை என்னுடைய குடும்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பியபோது குரல் தழுதழுத்தது.

எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான், என்னை விட மூன்று வயது பெரியவன். சின்னக் குழந்தையாக இருக்கும்போதே அவனுக்கு ஆட்டிசம் பாதிப்பு என்பதால் மெதுவாகத்தான் கற்றுக்கொள்ள முடியும். பதினாறு வயது நிரம்பிய பின்னும் அவனுக்கு நாங்கள் இன்னமும் பல்தேய்க்க கற்பிக்கிறோம் என்பதையெல்லாம் என் புதிய நண்பர்களிடம் அப்போது சொல்ல மனம் வரவில்லை.

ஆட்டிசம் என்ற வார்த்தையை கேட்டதுமே, அதிபுத்திசாலித்தனமும், கூடவே கொஞ்சம் கிறுக்குத்தனமும் கொண்டோர் என்று சிலர் பிழையாக நினைத்துக்கொள்கிறார்கள். நமக்கு ரொம்பவே பிடித்த ‘ரெயின் மேன்’ படத்தில் வரும் ஹாஃப்மன் போன்ற கதாபாத்திரங்கள் மாதிரி இருப்பார்கள்போல என்றும் கற்பனை செய்து கொள்கிறார்கள். ஆட்டிசம் என்பது ஒரு தொகுப்புக்கற்றை (Spectrum). வெளி உலகிற்கு தென்படுபவை என்னவோ இக்கற்றையின் சில இழைகளே. தாங்கள் சொல்ல நினைப்பதையோ, தெரிவிக்க முயல்வதையோ கூட செய்ய முடியாதவர்களும் ஆட்டிசமுடன் இருக் கிறார்கள். தங்களுடைய சொந்த உடலையே கட்டுப்படுத்த முடியாதவர்கள், தங்களுக்குத் தாங்களே ஊறு செய்துக் கொள்வார்கள், காரணமின்றி சோகத்தில் ஆழ்ந்து விடுபவர்கள் என பல வகைகள் உண்டு.

மேலே நான் சொன்ன, என்னுடைய அண்ணன் சந்துரு எல்லாவற்றையும், அதைவிட மேலதிகமாகவும் செய்வான். சந்துருவோடு சினிமாவுக்குப் போவது தனி வகையான ஒரு கொடுமை. இறக்கும் நிலையில் இருக்கும் மனைவியிடம், படத்தின் ஹீரோ மென்மையான குரலில் அன்பாக ஏதோ பேசிக்கொண்டிருப்பார். அந்த நேரம் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பான். எதையுமே அவனுக்கு மிதமான அளவில் செய்யமுடியாது. அவன் சிரித்தால் சுற்றியுள்ள எல்லோருக்கும் கேட்கும். தீவிர ரசிகர்கள் இருக்கும் ஒரு தியேட்டரில், இப்படி சிரிக்கும் ஒருவரை என் உறவினர் என்று யாரும் சொல்லிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். இப்போது அதை நினைத்தால் என்னால் புன்னகைக்க முடிகிறது.

ஆனால் அன்றோ நிலைமை வேறு. வெளியே சாப்பிடப்போகும்போது, எந்த வித இடைஞ்சலும் கவலையும் இல்லாமல், தங்களின் சின்னஞ்சிறு உலகத்தில் வாழும் சாதாரண குடும்பங்களைப் பார்க்கும்போது ஐயோ, எனக்கும் அப்படி ஒன்று கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறேன். பின்னர், ஏன் அப்படி நினைத்தேன் என்று என்னையே நான் நொந்து கொள்வேன், ஒருவித சங்கடம், கோபம், சோகத்துடனேயே எப்போதும் நான் வாழ்ந்திருக்கிறேன்.

ஆட்டிசம் இருக்கும் ஒருவரது சகோதரன் அல்லது சகோதரியாய் வாழ்வது என்பதே தனி விதமான ஒரு வாழ்க்கை அனுபவம். அவர்கள் மேல் பொங்கிவரும் பாசம் ஒருபக்கம், அவர்களது செயல்களால் ஏற்படும் வெறுப்பு இன்னொரு பக்கம் என உணர்ச்சிகள் ஊசலாடிக் கொண்டே இருக்கும்.

ஆட்டிசம் உடையவர்களிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும் பொது மக்களின் அணுகுமுறை கொஞ்சம் நல்லபடியாக இருந்திருந்தால் என் வாழ்க்கை இன்னும் கொஞ்சம் சுலபமாக இருந்திருக்கும்.

நாங்கள் வெளியே போகும் போதெல்லாம், என் அண்ணனைவிட வயதில் பெரியவர்கள் அவனை முறைத்துப் பார்ப்பதும், அவனை சீண்டுவது போல ஏதாவது பேசுவதும், கையால் தட்டுவதும் என்னை மிகவும் பாதித்திருக்கின்றன.

என் அண்ணனுக்கு வளைந்து கொடுங்கள் என்று நான் யாரிடமும் மன்றாடவில்லை. அவனை கொஞ்சம் மரியாதையுடன் நடத்துங்கள். தப்பிக்க முடியாதபடி சிக்கித் தவிக்கும் எதிர்பாராத பல சூழ்நிலைகள் என் அண்ணனால் என் பெற்றோர் வாழ்வில் நேர்ந்திருக்கிறது. கையறுநிலை, பயம், கோபம், கவலைகள் என பலவித உணர்வுகள் அவர்களை, அவர்களின் அன்றாடத்தை முடக்குவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த சமயத்தில் இதுபோன்ற பிள்ளைகள் வாய்த்த பெற்றோரை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், உங்களின் இன்னொரு குழந்தையை நீங்கள் ஒதுக்கி விடாதீர்கள்.

அவர்களுடைய பிரச்சனைகளைப் பற்றி ஏன் யாருமே அதிகம் பேசுவதில்லை? அவர் களுக்காகவும் நேரத்தை செலவிடுங்கள், அவர் களை பாராட்டுங்கள், அவர்களும் உங்களுக்கு முக்கியம்தான் எனும் எண்ணம் அவர்கள் மனதில் பதியும்படி நடந்துகொள்ளுங்கள்.

அதேநேரத்தில் இத்தகைய ஆட்டிசம் குழந்தைகளின் உடன் பிறப்புக்களே, நீங்களும் ‘இதுவும் கடந்து போகும்' என்ற அந்த புகழ்மிக்க கூற்றை நினைவில் கொள்ளுங்கள். இவ்வளவு பேசும் எனக்கே என் அண்ணனை, அப்படியே ஏற்று கொள்வதற்கு அதிக நாள் பிடித்தது. இதேபோன்று பிரச்சினைகளை சமாளிக்கும் பிறரோடு பேசியது அதற்கு உதவியாக இருந்ததுஎனக்கு. உங்கள் எண்ணங்களுக்கு நல்லவிதமான ஆக்கப்பூர்வமான வடிகால்களை தேடுங்கள். அப்படி நீங்கள் செய்தால், ஆட்டிசம் உள்ளஉங்கள் உடன்பிறந்தவர்களிடம் அன்பாக இருப்பதை விட, வேறு எதுவும் உலகில் எளிதாக இருந்துவிடாது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

இந்த வாழ்க்கையில் நீங்களும் அவர் களோடு ஒன்றாக நன்றாக பயணிக்க முடியும். அப்படி நினைத்தால் எந்த தயக்கமும் இல்லா மல் ஒரு நாள் அவர்களோடு கூடவே கொட்டும்மழையில் ஆடி பாடி இன்பமாய் ஆட்டம் போடுவீர்கள். என் அண்ணா செய்யாத தவறுக்காகஅவனை பல ஆண்டுகள் வெறுத்திருக்கிறேன். ஆனால், இன்றோ அவனை என் நண்பர்களிடம் பெருமையுடன் அறிமுகம் செய்து வைக்கவும் முடிகிறது. என்னால் இப்போது தைரியமாக ஒன்றை சொல்ல முடியும். எதிர்பாராத சூழல் ஒன்று வாழ்க்கையில் ஏற்படுமேயானால் எப்போதும் அதை நாம் இணைந்தே எதிர்கொள்வோம்.

தமிழில்: உத்ரா துரைராஜன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x