Published : 29 Mar 2024 09:00 AM
Last Updated : 29 Mar 2024 09:00 AM

கோடை வெப்பத்தை சமாளிக்க வழிகாட்டுதல்கள்

புதுச்சேரி: கோடை வெப்பத்தை சமாளிக்க புதுவை சுகா தாரத்துறை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

புதுவை சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடை காலத்தில் ஏற்படும் வேர்க்குரு, உடலின் மூடப்பட்ட பகுதிகளில் அரிப்பு, தோல் அழற்சிக்கு வழிவகுக்கும். வெப்ப சோர்வு, வெப்ப பக்கவாதம் ,வெப்ப ஒத்திசைவு, வெப்ப வீக்கம், கால்கள், கணுக்கால் மற்றும் கைகளில் லேசான வீக்கம் ஏற்படும். வெப்ப பிடிப்புகள் எலும்பு தசையின் வலி, தன்னிச்சையான சுருக்கங்கள், அதிகமாக வியர்த்தல் ஏற்படும். வயதானவர்கள் எழும்போது தலைச்சுற்றலோடு மயக்கம் ஏற்படும்.

இந்த அறிகுறிகளோடு தலை வலி, குமட்டல், வாந்தி உடல் நலக்குறைவு, தலைச் சுற்றல் மற்றும் தசைப் பிடிப்பு ஏற்படும். அடுத்து வரும் மாதங்களில் வெப்ப நிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. கோடை கால வெப்பத்தை சமாளிக்க, மக்கள் அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும். மோர், எலுமிச்சை சாறு இவற்றுடன் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். இளநீர் பருகலாம். வாய் வழி நீர்ச்சத்து கரைசலை நீரில் கரைத்து குடிக்க வேண்டும்.

தளர்வான மெல்லிய பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும். கம்பளி ஆடைகளை போர்த்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி, குளிரூட்டும் கண் கண்ணாடி அணிந்து செல்ல வேண்டும். குழந்தைகளை வெயிலில் அழைத்து செல்லும் போது அதிக அளவில் தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். நாம் இருக்கும் இடத்தை காற்றோடமாக வைத் திருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் நேரடியாக படும் திசையில் ஜன்னல் அமைந்திருந்தால் அதை பகல் நேரத்தில் மூடி, இரவு நேரத்தில் மட்டும் திறந்து வைக்கலாம்.

வெப்பம் அதிகமாக இருக்கும் பகல் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமையலறையை காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். தலைச் சுற்றல், மயக்கம், குமட்டல், தலைவலி, வழக்கத்துக்கு மாறாக அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல், சுவாச பிரச்சினை இருந்தால் மருத்துவர்களை அணுக வேண்டும். சூரிய வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களை நிழல் மற்றும் காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்க வேண்டும்.

ஆடைகளை தளர்த்தி குளிர்ந்த நீரினை உடம்பில் ஒற்றி எடுக்க வேண்டும். மின் விசிறியின் காற்று உடலில் படும்படி வைக்க வேண்டும். குளிர் சாதனம் கிடைக்குமாயின் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். பாதங்களை சற்று உயர்த்தி படுக்க வைக்க வேண்டும். இந்த முறைகளில் பலன் ஏற்படாவிட்டால் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.

108 ஆம்புலன்ஸை அழைக்கலாம். வெப்ப காலத்தில் ஏற்படும் நோய்களை சமாளிக்கவும் அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் புதுவையில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிக சூரிய வெப்பத்தால் உருவாகும் அயர்ச்சி மற்றும் பக்கவாதத்தை தடுத்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x