Published : 27 Mar 2024 07:28 AM
Last Updated : 27 Mar 2024 07:28 AM
கொல்கத்தா: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனன்யா சிங் என்ற 22 வயது பெண் யுபிஎஸ்சி தேர்வை வென்று நாட்டின் இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரி என்கிற சாதனைபடைத்தார்.
நாட்டின் உயரிய பதவிகளில் முதன்மையானதாக ஐஏஎஸ் கருதப்படுகிறது. இதற்காக நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வு எனும் குடிமைப்பணித்தேர்வை வெல்வதென்பது சவால் நிறைந்தது. குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு முறை தேர்வெழுதினால் மட்டுமே இத்தேர்வில் வெற்றி கிடைக்கும் நிலை உள்ளது. அதிலும் யுபிஎஸ்சி வென்றவர்களில் பெரும்பாலோர் பயிற்சி மையங்களில் பிரத்தியேகமாகத் தயார் ஆனவர்களே.
இந்நிலையில், உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ் நகரத்தைச் சேர்ந்தவர் அனன்யா சிங். இவர் ஏற்கெனவே தனது பத்தாம் வகுப்பில் 96 சதவீதம், பன்னிரெண்டாம் வகுப்பில் 98.25% வென்று அவற்றுக்கான பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவர். பள்ளிப்படிப்பை சிஐஎஸ்சிஇ வழிக்கல்வி மூலம் சிறப்பாக முடித்துவிட்டு டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் பொருளியல் (Economics Honors) பாடப்பிரிவில் பட்டம் பெற்றார்.
சிறுவயதிலிருந்தே குடிமைப்பணி அதிகாரி ஆக வேண்டும் என்று கனவு கண்டார். 2019-ம் ஆண்டில் யுபிஎஸ்சி தேர்வெழுத சுயமாகத் தயாரானார். அதே ஆண்டில் நாட்டின் இளம் ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வானார்.
தற்போது மேற்குவங்கத்தில் பதவி வகித்து வருகிறார். இவருக்கு அடுத்ததாக 2023-ம் ஆண்டில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அன்சார் ஷேக் என்ற 21 வயது இளைஞர் மிக இளம் வயதில் ஐஏஎஸ் அதிகாரி ஆகி சாதனை புரிந்தார். இருப்பினும் இந்திய பெண்களில் அனன்யா சிங்கின் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT