Last Updated : 19 Mar, 2024 11:58 AM

 

Published : 19 Mar 2024 11:58 AM
Last Updated : 19 Mar 2024 11:58 AM

“பாரம்பரிய உணவுப் பழக்க மாற்றத்தால் வாழ்வியல் நோய்களுக்கு ஆளாகும் பழங்குடியின மக்கள்!”

கோவை: பாரம்பரிய உணவுப் பழக்க மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற காரணங்களால் பழங்குடியின மக்கள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாக, சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 37 வகையான 8.41 லட்சம் பழங்குடியின மக்கள் வசிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில், கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 31 ஆயிரம் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இதில் இருளர், காட்டு நாயகன், காடர், குருமன் உள்ளிட்ட பல்வேறு உட் பிரிவுகளை சேர்ந்த பழங்குடியின மக்கள் உள்ளனர். குறிப்பாக மலை காடுகளில் அசாதாரண சூழலில் வளரும் பழங்குடியின மக்கள், சாமை, திணை, ராகி, கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் உண்பதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால், அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல உடல் ஆரோக்கியத்தை கொண்டிருந்தனர். தற்போது, பழங்குடியின மக்கள் பாரம்பரிய உணவுப் பொருட்களை விட்டு விலகி வருகின்றனர். இதனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட வாழ்வியல் நோய்களை சந்தித்து வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது: மாறிவிட்ட உணவுப் பழக்க முறைகளால் பழங்குடியின மக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஏற்பட்டு வருவது அதிகரித்துள்ளது. பழங்குடியின பெண்களில் சிலரிடம் வெற்றிலை பாக்கு பழக்கம் உள்ளது. சிலர் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர். வெற்றிலை பாக்கு உட் கொள்ளும்போது பசி உணர்வு இல்லாமல் போகிறது. இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் உள்ளதால் ரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மேலும் வெற்றிலை, பாக்குடன்புகையிலை சேர்த்து பயன்படுத்துவதால் வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. மக்களை தேடி மருத்துவம் முகாமில் பழங்குடியின மக்களுக்கு சிகிச்சைகளை அளித்தோம். அதில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதலாகி உள்ளது. இயற்கை சூழலில் கிடைக்கும் பாரம்பரிய உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் குறித்தும், சுகாதாரம் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுவாக தலசீமியா, சிக்கல் சீமியா போன்ற நோய்கள் பழங்குடி மக்களை பாதிக்கிறது, என்றார்.

அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனத்தின் உணவு அறிவியல், ஊட்டச்சத்து துறை பேராசிரியர்கள் கூறியதாவது: ராணுவத்தில் உள்ளவர்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் சர்க்கரை நோய் அரிதாகவே இருக்கும். நீலகிரி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளுக்கு சென்ற போது உணவுப் பழக்க மாற்றமுறைகளால் பழங்குடி மக்களிடையே உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததைக் காண முடிந்தது.

கடந்த 5 ஆண்டுகளில் இம்மாதிரியான பாதிப்பு அதிகரித்துள்ளது. இயற்கை சூழலில் விளையும் பாரம்பரிய உணவு வகைகளை பழங்குடியின மக்கள் பின்பற்ற வேண்டும்.இப்போது அரிசி மற்றும் பரோட்டா போன்றஉணவு வகைகளை உட்கொள்வதால் அவர்களின் உணவுப் பழக்கம் மாறியுள்ளது. இதனால் வாழ்வியல் நோய்கள் அம்மக்களிடையே பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. பழங்குடி மக்களிடம் கல்வி மூலம் மட்டுமே சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

பழங்குடி மக்களின் தொன்மையான கலாச்சாரம், உணவு முறை, பழக்க வழக்கங்கள், மொழி உள்ளிட்டவைகளை பாதுகாக்க வேண்டும். பழங்குடி மக்களின் உட்பிரிவுகளில் அழிவின் விளிம்பில் உள்ளவர்களை அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் மீட்டெடுக்க வேண்டும், என்றனர்.

இது குறித்து, நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க செயலாளர் ஆல்வாஸ் கூறியதாவது: பழங்குடியின மக்களின் உணவுப் பழக்கம் மாற்றமும் வாழ்வியல் நோய் தாக்க ஒரு காரணமாக உள்ளது. அதே வேளையில் அருகில் உள்ள தோட்டங்களில் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் போதும், அதன் தாக்கம் பழங்குடியினர் விளை நிலங்களுக்கு சென்று பாதிக்கிறது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மாசு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பும் ஒரு பிரச்சினையாக உள்ளது.

காற்று மாசும் பல்வேறு உடல் நல பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. சர்க்கரை நோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதால் மருத்துவச் செலவுக்கு கூட பணம் இல்லாத நிலையில் உள்ளனர். மேலும் சிலர் மருத்துவச் செலவை சமாளிக்க கடனாளி ஆகின்றனர். பழங்குடி யின மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசு கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x