Last Updated : 06 Mar, 2024 09:43 PM

2  

Published : 06 Mar 2024 09:43 PM
Last Updated : 06 Mar 2024 09:43 PM

மேட்டூர் அருகே இறுதி ஊர்வலத்தில் விவசாயி உடலை சுமந்து சென்ற பெண்கள் - பெரியார் கொள்கை தாக்கம்

மேட்டூர் அருகே கொளத்தூர் அடுத்த உக்கம்பருத்திக்காடு கிராமத்தில் உயிரிழந்த செல்லமுத்துவின் உடலை பெண்கள் சுமந்து சென்றனர்.

மேட்டூர்: மேட்டூர் அருகே கொளத்தூர் அடுத்த உக்கம்பருத்திக்காடு கிராமத்தில் உயிரிழந்த விவசாயி செல்லமுத்துவின் இறுதி ஊர்வலத்தில், அவரது உடலை பெண்கள் சுமந்து சென்றனர்.

மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உக்கம்பருத்திக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள், தங்கள் குடும்ப நிகழ்வுகளில் சடங்கு, சம்பிரதாயங்களை தவிர்த்து பெரியார் கொள்கை வழியில் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சார்ந்த செல்லமுத்து (74), விவசாயி. திராவிடர் விடுதலைக் கழகத்தை சேர்ந்தவர். இவரது மனைவி மலர், மகன் செல்வேந்திரன் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். செல்லமுத்து வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

இதனிடையே, வழக்கமாக நடைபெறும் இறுதிச் சடங்குகளை தவிர்த்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. வழக்கமான இறுதி ஊர்வலத்தில் ஆண்களே முன்னின்று நடத்துவதோடு, பெண்களை சுடுகாடு வரை அனுமதிக்காமல் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி விடுவார்கள். ஆனால், செல்லமுத்துவின் இறுதி ஊர்வலத்தை, அவரின் குடும்பத்தின் ஒப்புதலோடு அந்த கிராமத்தைச் சார்ந்த பெண்களே தலைமையேற்று நடத்தினர்.

இறந்தவரின் உடலை பெண்கள் சுமந்து முன்னே செல்ல, ஆண்கள் அவர்களுக்கு பின்னால் அணிவகுத்துச் சென்றனர். உடல் தகனம் செய்யும் இடத்தில், அங்கு நடமாடும் தகன மேடை வரவழைத்து தயார் நிலையில் வைத்திருந்தனர். பின்னர், புகழ் வணக்கம் செலுத்தி, உடலை தகனமேடையில் வைத்து எரியூட்டினர்.

குறிப்பாக, எந்த நிகழ்விலும் ஆண், பெண் என்ற பாலின பேதம் பார்க்கக்கூடாது என்ற பெரியார் கொள்கைப்படி, பெண்களும் இறுதி நிகழ்வில் பங்கேற்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெண்களை ஊர்வலத்திற்கு தலைமை ஏற்க வைத்து, அவர்கள் பின்னால் ஆண்கள் சென்றதாக அந்த கிராமத்தினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x