Published : 06 Mar 2024 07:00 AM
Last Updated : 06 Mar 2024 07:00 AM

வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள்: புற்றுநோயால் மரணித்த இளம் பெண் உருக்கமான கடிதம்

டனெய்லா தாக்கரே

லண்டன்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 25 வயது பெண் டனெய்லா தாக்கரே. பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் மகிழ்ச்சியாக அனுபவிக்கும்படி கடிதம் எழுதிவிட்டு உயிரிழந்துள்ளார்.

அவர் எழுதிய இறுதி கடிதத்தை டனெய்லாவின் லிங்க்ட்இன் பக்கத்தில் அவரது காதலர் டாம் வெளியிட்டிருப்பது பலரை கண்கலங்கச் செய்திருக்கிறது.அதில் கூறியிருப்பதாவது: நீங்கள் இந்த பதிவை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்த நான் மரணித்துவிட்டேன் என்று அர்த்தம். எனது குடும்பத்தினர் என் சார்பாக நான் விட்டுச்சென்ற இறுதி செய்தியை பதிவிட்டுக் கொண்டிருப்பார்கள். முதலாவதாக, எல்லா வகையான புற்றுநோயும் நமது வாழ்க்கை முறை மாற்றத்தினால் வருவதல்ல என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

சிலருக்கு பரம்பரை வியாதியாகவும் அல்லது துரதிருஷ்டவசமாக தானாககூட வந்துவிடுவதுண்டு. நான் என்னவோ, உடல் ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்பாகவும்தான் இருந்தேன். இருப்பினும் எனது பித்தப்பையில் புற்றுநோய் தொற்று பரவிவிட்டது. நடந்த எதுவும் எனது கட்டுப்பாட்டில் இல்லை. அதன் பிறகு எனது வாழ்க்கையும் தலைகீழாக மாறிப்போனது.

நம் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை கட்டுப்படுத்த முடியாமல் போனாலும் அதற்கு எந்த மாதிரி எதிர்வினையாற்றப் போகிறோம் என்பதை நாம் நிச்சயம் தீர்மானிக்க முடியும். எனது வாழ்க்கை நிலைகுலைந்த போதிலும் இதற்காக புலம்பி சோக கீதம் பாடக்கூடாது. மீதமுள்ள ஒவ்வொரு நொடிப்பொழுதையும் அணு அணுவாய் ரசிப்பதென முடிவெடுத்தேன்.

நான் எப்போதும் நம்பிக்கையுடன் சொல்வது போல் வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களையும் ரசித்து அனுபவியுங்கள். அற்புதமான கற்பனை உலகில் மிதந்து செல்லுங்கள். உங்களை மகிழ்விக்கக்கூடிய அத்தனையும் செய்யுங்கள். உங்களது மகிழ்ச்சியை எவரேனும் பறிக்க அனுமதிக்காதீர்கள்.

இறுதியாக, எனதன்பு அழகிய டாம், உன்னை காதலிக்கிறேன். முடிவின்றி காதலிப்பேன். எனக்குதுணையாக இருந்து எனது வாழ்வில் அத்தனை அன்பும் மகிழ்ச்சியும் பொங்க காரணமாக இருந்த உனக்கு மனமார்ந்த நன்றிகள். போ! உனது வாழ்க்கையை அனுபவி, அதற்கான முழு தகுதி படைத்தவன் நீ. இவ்வாறு மரணத்தைத் தழுவும் முன்பு டனெய்லா தாக்கரே விட்டுச்சென்ற பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி பலரை மனமுருகச் செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x