Last Updated : 05 Mar, 2024 09:00 AM

 

Published : 05 Mar 2024 09:00 AM
Last Updated : 05 Mar 2024 09:00 AM

கோவையில் சிதிலமடைந்த ஆங்கிலேயர் கால கட்டிடம் - நாட்டிலேயே இரண்டாவதாக தொடங்கப்பட்ட வனக் கல்லூரி!

கோவை கெளலிபிரவுன் சாலையில் சிதிலமடைந்த நிலையில் உள்ள நூற்றாண்டு பழமையான, மாநில வனப் பணிக்கான மத்திய அகாடமிக்கு சொந்தமான கட்டிடம். படம்: ஜெ.மனோகரன்

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் கெளலிபிரவுன் சாலையில் உள்ள மாநில வனப் பணிக்கான மத்திய அகாடமியின் இருபெரும் கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. நாட்டிலேயே இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட, 112 ஆண்டுகள் பழமையான, ஆங்கிலேயர் கால கட்டிட கலையைத் தாங்கி நிற்கும் இந்தக் கட்டிடத்தை, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வனவியல் கல்வி வரலாறு: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், இந்தியாவில் வனவியல் கல்வி 1867-ல் தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வனச்சரகர் உள்ளிட்ட அலுவலர்களை பயிற்றுவிக்கும் நோக்கத்துக்காக 1878-ல் டேராடூனில் வனப்பள்ளி நிறுவப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை மாகாணத்தில் 1912-ல் கோவையில் மெட்ராஸ் வனக் கல்லூரி தொடங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் 1906-ல் கட்டப்பட்டதைத் தொடர்ந்து, டேராடூனுக்குப் பின்னர் தொடங்கப்பட்ட இரண்டாவது வனக்கல்லூரி கோவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கல்லூரியின் முதல் முதல்வராக கெளலி பிரவுன் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். ( வனக் கல்லூரி அமைந்துள்ள சாலைக்கு இவரது பெயர் தான் வைக்கப்பட்டுள்ளது ). இரண்டாம் உலகப் போர் சமயத்தில் காய மடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆங்கிலேய ராணு வத்தின் கட்டுப்பாட்டில் சென்றதால் இக்கல்லூரி மூடப்பட்டது. தொடர்ந்து, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அரசு நிர்வாகத்தின் கட்டுப் பாட்டில் வந்தது. 1945-ல் இந்தியாவை சேர்ந்த முதல்வராக ரங்கநாதன் பொறுப்பு வகித்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அதிக எண்ணிக்கையிலான வனப் பாதுகாவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 1948-ல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றது. 1955-ல் தெற்கு வனச்சரகர் கல்லூரியாக செயல்பட்டது. பின்னர் உதவி வனப் பாதுகாவலர் அலுவலர் நிலைக்கு கீழ் உள்ள பணியிடங்களுக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருக்க வேண்டும் என்ற வகையில் தெற்கு வனக் கல்லூரியின் செயல்பாடு முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக 1987-ல் மாநில வனப்பணிக்கான மத்திய அகாடமி என ( காஸ்பாஸ் ) மாற்றம் பெற்றது.

பயிற்சி மையம்: இந்த அகாடமியில் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வாகும் உதவி வனப் பாதுகாவலர்கள் ( Assistant Conservator of forest-ACF ) நிலை அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றரை ஆண்டு தங்கி பயிலும் மையமாக விளங்கி வருகிறது. நாட்டிலேயே டேராடூன், கோவை, பர்னிகட் ஆகிய மூன்று இடங்களில் தான் மாநில அளவில் தேர்ச்சி பெறும் உதவி வனப் பாதுகாவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கோவையில் 1912-ல் கட்டப்பட்ட மெட்ராஸ் வனக் கல்லூரி அலுவலகம் தற்போது மாநில வன உயர் பயிற்சியகமாக உள்ளது. மெட்ராஸ் வனக் கல்லூரியாக இருந்த போது ஆங்கிலேய வன அதிகாரிகள் தங்கி பயிற்சி அளித்த இரு பெரிய கட்டிடங்கள் பழமையானதால் கைவிடப்பட்டு பராமரிப்பில்லாத நிலையில் உள்ளன. உயர் பயிற்சியகம் தற்போது புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இது குறித்து, ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “ஆங்கிலேயர் காலத்தில் கட்டி எழுப்பப்பட்ட இந்த கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட நிலையில், ஆங்கிலேயர் கால கட்டிட கலையைத் தாங்கி நிற்கும் இந்தக் கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும்” என்றனர்.

தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநரும், சமூக வரலாற்று ஆய்வாளருமான பூங்குன்றன் கூறும் போது, “கோவையில் வரலாற்று சிறப்பு மிக்க ஆங்கிலேயர் கால கட்டிடத்தை, சென்னையில் விக்டோரியா அரங்கம் புதுப்பிப்பது போல பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மாநில வனப் பணிக்கான மத்திய அகாடமி ( காஸ்பாஸ் ) அதிகாரிகள் கூறுகையில், “ஆங்கிலேய அதிகாரிகள் தங்கி வனச்சரகர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி வழங்கிய இந்தக் கட்டிடம், தற்போது பழமையானதாகி விட்டதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தை புதுப்பிக்க கோரி மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை துறைக்கு பரிந்துரைத்துள்ளோம். கட்டிடத்தின் உறுதித்தன் மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x