Published : 26 Feb 2024 09:02 AM
Last Updated : 26 Feb 2024 09:02 AM
மதுரை: மதுரை இயற்கை பண்பாட்டு மையம் அமைப்பினர் மாதந்தோறும் பண்பாட்டுச் சூழல் நடைப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பயணத்தில் ஆர்வமுள்ள மக்களை அருகேயுள்ள காடுகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். அதன்படி, நேற்று மதுரை அருகேயுள்ள யானைமலைக்கு 30 திருநங்கைகள், 3 திருநம்பிகள், 10-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்களை அழைத்துச் சென்றனர். காலை 6.30 மணிக்கு மதுரை உத்தங்குடியில் உள்ள நாகர் கோயில் என்றழைப்படும் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் நுழைவாயில் முன்பு இருந்த நடுகற்களைப் பார்வையிட்டனர்.
மதுரை இயற்கைப் பண்பாட்டு மைய அறங்காவலர் மற்றும் கோயில் கட்டிடக் கலை, சிற்பத் துறை ஆய்வாளருமான பேராசிரியர் ப.தேவி அறிவு செல்வம் நடுகற்கள் குறித்து விளக்கினார். பின்னர் யானைமலை கருப்பு கோயில் அடிவாரப் பாதை வழியாக தமிழி கல்வெட்டு அமைந்துள்ள மேல் பகுதிக்கு சென்றனர். பசுமை நடையின் சித்திரை வீதிக்காரன் சுந்தர், ரகுநாத் ஆகியோர் யானை மலையின் வரலாற்று செய்திகளையும், சமணர் படுகை மற்றும் தமிழி கல்வெட்டு சார்ந்த செய்திகளையும் பகிர்ந்து கொண்டனர்.
திருநங்கையர் ஆவண மைய இயக்குநர் பிரியா பாபு 3 ஆயிரம் ஆண்டு பழமையான மதுரைக்கும், திருநங்கையர் சமூகத்துக்குமான உறவு குறித்து வரலாற்று சான்றுகளுடன் விளக்கினார். பேராசிரியர் தேவி அறிவு செல்வம் கோயில் கட்டிடக்கலையில் திருநங்கையர் குறித்த சித்திரம் பற்றி பேசினார். மதுரை இயற்கை பண்பாட்டு மைய உறுப்பினர் தமிழ்தாசன் கூறுகையில், இந்த நடைப் பயணத்தில் திருநங்கையர், திரு நம்பிகள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததும் அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மலையில் இருந்து லாடன் குடைவரை கோயில் வரை நடைப் பயணம் மேற்கொண்டோம், என்றார். யானைமலை தமிழ் சங்கத் தலைவர் இளங்குமரன் யானைமலை சந்தித்த நெருக்கடிகள், யானை மலையைக் காக்க மக்கள் நடத்திய போராட்டங்களை விளக்கினார்,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT