Published : 20 Feb 2024 05:46 AM
Last Updated : 20 Feb 2024 05:46 AM
உதகை: தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் பழங்குடியினர் மொழி வளங்களை ஆவணப்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் தமிழ்நாட்டில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் பயன் பெறுவார்கள். இங்கு மட்டுமே தோடர், கோத்தர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர், பனியர் மற்றும் படுகர்கள் என அதிகபட்சமாக 7 பண்டைய பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை.
பேச்சு வழக்கிலுள்ள அவர்களது மொழிக்கு, எழுத்து வடிவம் கொடுக்கும் பணியில் அந்த சமூகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உதவும் வகையில், அரசின் அறிவிப்பு உள்ளதாக நெலிகோலு அறக்கட்டளை செயலாளர் ஆர்.சிவகுமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, ‘‘மாநிலத்திலேயே அதிக பழங்குடியினர் வசிப்பது நீலகிரி மாவட்டத்தில்தான். பழங்குடியின மக்களின் மொழி பேச்சு வழக்கிலுள்ள நிலையில், எழுத்து வடிவம் கொடுக்க அந்தந்த பழங்குடியினர் முயற்சி செய்து வருகின்றனர். மேலும், பழங்குடியினர் மொழி அகராதி வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, பழங்குடியினர் மொழி வளங்களை ஆவணப்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, எங்களின் முயற்சிக்கு வலு சேர்க்கும்.
தற்போது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் படுகர் மொழி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மேலும், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டால், வேலைவாய்ப்பு கிடைத்து அவர்களின் வாழ்க்கை தரம் உயரும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT