Published : 18 Feb 2024 04:47 AM
Last Updated : 18 Feb 2024 04:47 AM
புதுடெல்லி: கடந்த ஆண்டில் அதிக நன்கொடை வழங்கிய இந்திய பெண்கள் பட்டியலில் ரோஹிணி நிலேகனி ரூ.170 கோடியை நன்கொடையாக வழங்கி முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டில் நன்கொடை வழங்கிய இந்திய பெண்கள் பட்டியலை எடல்கிவ் ஹுருன்இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலேகனியின் மனைவி ரோஹிணி நிலேகனி முதலிடம் பிடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.170 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். 2022-ம் ஆண்டில் ரூ.120 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.
ரோஹிணி பிரபலமான எழுத்தாளர் ஆவார். அத்துடன் அவர் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் கல்வித் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவர் இப்போது ரோஹிணி நிலேகனி அறக்கட்டளையின் பொறுப்பாளராக உள்ளார். அத்துடன் பிராத்தம் புக்ஸ் என்ற லாபநோக்கமற்ற குழந்தைகளுக்கான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய அளவிலான திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, லாபநோக்கமற்ற கல்வித் துறை சார்ந்த எக்ஸ்டெப் மற்றும் அர்க்யம் அறக்கட்டளைகளின் பின்னணியில் இருந்து செயல்பட்டு வருகிறார்.
மும்பையில் வளர்ந்த ரோஹிணி, எல்பைன்ஸ்டோன் கல்லூரியில் பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டம் பெற்றுள்ளார். பத்திரிகையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், புகழ்பெற்ற ஊடக நிறுவனத்தில் பணியாற்றினார்.
1981-ல் நந்தன் நிலேகனிக்கும் ரோஹிணிக்கும் திருமணம் நடந்தது. அதே ஆண்டில்தான் நந்தன்நிலேகனி 6 பேருடன் சேர்ந்து இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினார்.
இதற்காக தன்னிடமிருந்த ரூ.10 ஆயிரத்தையும் வழங்கி உள்ளார் ரோஹிணி. அதன் பிறகு இன்போசிஸ் நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்தது. இதையடுத்து ரோஹிணியின் பங்கு மதிப்பு உயர்ந்து அவருடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு பலமடங்கு உயர்ந்தது.
நந்தன் நிலகனியின் சொத்து மதிப்பு ரூ.25,765 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT