Published : 12 Feb 2024 04:06 AM
Last Updated : 12 Feb 2024 04:06 AM
மதுரை: மதுரையில் 6-ம் வகுப்பு மாணவர் 29 நிமிடத்தில் 200 யோகாசனங்களை செய்து சாதனை படைத்தார்.
விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், இந்திய யோகா சங்கம் சார்பில் மதுரையில் பள்ளி மாணவர்களிடையே யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், யோகாசனப் போட்டி அய்யர் பங்களாவிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று யோகாசனங்களை செய்து காண்பித்தனர். மதுரையைச் சேர்ந்த சிவராஜா - கல்பனா தம்பதியின் மகன் தியானேஷ் ( 11 ), வீரபாஞ்சான் அருகே உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்புப் படிக்கிறார்.
இவர், இப்போட்டியில் பங்கேற்றார். இம்மாணவர் 29 நிமிடங்களில் பத்மாசனம், வீராசனம், யோகமுத்ராசனம், அர்த்த சங்கராசனம், பிறையா சனம், சானுசீராசனம், உத்தானபா தாசனம், நவாசனம் உள்ளிட்ட 200 ஆசனங்களைச் செய்து பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
இது குறித்து மாணவர் தியானேஷ் கூறுகையில், 5 வயதில் இருந்தே யோகா, ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் செய்து வருகிறேன். முதல் கட்டமாக 29 நிமிடத்தில் 200 ஆசனங்கள் செய்துள்ளேன். அடுத்தகட்டமாக சக்கராசனத்தில் அதிக நேரம் நின்று சாதிக்கப் பயிற்சி எடுத்து வருகிறேன், என்றார். இது குறித்து மாணவனின் யோகா ஆசிரியர் சுரேஷ் கூறுகையில், யோகாவில் இதுவரை ஒரு மணி நேரத்தில் 90 முதல் 120 ஆசனங்களே செய்துள்ளனர். ஆனால், மாணவர் தியானேஷ் 29 நிமிடத்தில் 200 ஆசனங்கள் செய்து சாதனை படைத்துள்ளார், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT