Published : 06 Feb 2024 04:33 PM
Last Updated : 06 Feb 2024 04:33 PM
மதுரை: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பக் கலையை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மதுரை பரவையைச் சேர்ந்த ஒரு தம்பதி இலவசமாக கற்றுத் தருகின்றனர் பரவையைச் சேர்ந்த ச.முத்துநாயகம் (39). தனியார் வாகன ஓட்டுநர். இவரது மனைவி இன்பவள்ளி. எம்பிஏ பட்டதாரி. கணவன், மனைவி இருவரும் துவரிமானில் சிலம்ப வாத்தியார் காட்டுராஜா என்பவரிடம் கடந்த 2002-ம் ஆண்டில் சிலம்பக் கலையை கற்றுத் தேர்ந்தனர்.
இவர்கள் கற்ற கலையை அடுத்த தலை முறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 2019-ம் ஆண்டு முதல் இலவசமாக சிலம்பம் கற்றுத் தந்து வருகின்றனர். இவர்களிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் தேசிய, மாநில போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு சாதனை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஆசான் காட்டுராஜா இலவச சிலம்பப் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர்களான ச.முத்துநாயகம்-இன்பவள்ளி ஆகியோர் கூறியதாவது: சிலம்பக் கலையை துவரிமானைச் சேர்ந்த காட்டுராஜா வாத்தியாரிடம் இலவசமாக கற்றோம்.
உறவினர்களான எங்கள் இருவருக்கும் 2011-ல் திருமணம் நடந்தது. எங்களுக்கு 11 வயது, 9 வயதில் 2 மகன்கள் உள்ளனர். பரவையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் எங்கள் மகன்களுக்கு சிலம்பம் கற்றுத் தர தொடங்கினோம்.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கேட்டுக் கொண்டதால் அவர்களுக்கும் சிலம்பக் கலையை கற்பித்தோம்.
2019-ல் ஆசான் காட்டுராஜா இலவச சிலம்பப் பயிற்சிப் பள்ளியை ஆரம்பித்தோம். வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்கள் காலை, மாலையில் பயிற்சி அளிப் போம். ஞாயிற்றுக்கிழமைகளில் வெளி யூர்களுக்கு சென்று போட்டிகளில் பங் கேற்போம்.
புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு ரூ.11, ரூ.21, ரூ.51, ரூ.101 காணிக்கை வைப்பார்கள். அதைத் தவிர வேறு கட்டணம் வாங்க மாட்டோம். 20-க்கும் மேற்பட்ட போட்டிகளில் எங்கள் மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். தற்போது மாடக்குளம், விளாங்குடி, சோழவந்தான், நரிமேடு, குலமங்கலம் உட்பட பல் வேறு பகுதியிலிருந்து மாணவர்கள் வருகின்றனர்.
கல்லூரி மாணவ, மாணவிகளும் வருகின்றனர். கலைப் பண் பாட்டுத் துறையின் அடையாள அட்டை வைத்துள்ளோம். எங்களது மாணவர்கள் சிலம்பத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த தேசிய சிலம்பப் போட்டியில் எங்கள் மாணவர்கள் பங்கேற்று 10 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். அரசு வேலையில் சிலம்பம் விளை யாட்டுக்கு இட ஒதுக்கீடு உள்ளதால், தற்போது அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சிலம்பம் கற்க ஆவலோடு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT