Published : 06 Feb 2024 03:35 PM
Last Updated : 06 Feb 2024 03:35 PM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலையில் உள்ள மல்லியம்மன் துர்கம் பழங்குடி கிராம மக்கள், மின் இணைப்பு இல்லாததால், அரை நூற்றாண்டாக இருளில் வாழும் சூழல் தொடர்கிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் கடம்பூர் மலையில், அடர்ந்த வனப்பகுதியில் மல்லியம்மன் துர்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு வாகனங்கள் செல்ல முறையான சாலை வசதி இல்லை. கடம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கிமீ தூரத்தில் இந்த கிராமத்திற்கு, மிகவும் கரடுமுரடான பாதையில் பயணித்து, செங்குத்தான சரிவுகளைக் கடந்து 2 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.
இதற்கென இயக்கப்படும் சுமை வாகனத்திற்கு கட்டணம் அதிகம். 20 முதல் 30 பேர் வரை சேர்ந்து வாரத்தில் ஒருநாள் கடம்பூர் வந்து செல்ல, ரூ.3,000 வரை கொடுக்க வேண்டியுள்ளது. அவசர தேவைகளுக்கு சிலர் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால், சரிவான பாதையில் இருசக்கர வாகனத்தில் சாகசப் பயணம் மேற்கொள்வது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.
மல்லியம்மன் துர்கம் கிராமத்தில், 2011-ம் ஆண்டு 150 குடும்பங்களைச் சேர்ந்த 650 பேர் குடியிருந்தனர். போக்குவரத்து வசதி, மின்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் பலரும் இடம் பெயர்ந்த நிலையில், தற்போது 80 குடும்பத்தினர் மட்டும் குடியிருந்து வருகின்றனர். கோயில் திருவிழா உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மட்டுமே, இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த கிராமத்திற்கு வந்து செல்கின்றனர்.
சுதந்திரத்திற்கு முன்பிருந்தே, மின் இணைப்பு இல்லாமல் இருந்த இந்த கிராமத்திற்கு, கடம்பூரில் இருந்து 1972-ல் மரக்கம்பங்கள் அமைக்கப்பட்டு, வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் 1974 -ம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயில் மின்கம்பங்கள் எரிந்துபோனது. அதன்பிறகு இங்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
மின்வசதி கோரி இப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டில் மின்வாரியம் 123 தானியங்கி சூரிய ஒளி அமைப்புகளை வீடுகளுக்கு வழங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான பேட்டரிகள் மற்றும் மின் விளக்குகள் செயலிழந்துவிட்டன. இதனால் இந்த கிராம மக்கள் மண்ணெண்ணெய் விளக்குகளை மட்டுமே தற்போது நம்பியுள்ளனர்.
இதுகுறித்து மல்லியம்மன் துர்கம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் கூறியதாவது: மின்வசதி இல்லாததாலும், சோலார் விளக்குகள் செயல் இழந்ததாலும் மாலை நேரத்திலேயே கும்மிருட்டு கிராமத்தைச் சூழ்ந்து விடும். சமைக்கும் போதும் வெளியாகும் நெருப்பின் ஒளியும், மண்ணெண்ணெய் விளக்குகளும் தான் இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளிச்சம் தருகின்றன.
ரேஷன் கடையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், விளக்கு எரிக்க போதுமானதாக இல்லை. போதிய வருமானம் இல்லாததால், வெளிச்சந்தையில் மண்ணெண்ணெய் வாங்கவும் முடியவில்லை.
விவசாய வேலைகளை முடித்துவிட்டு திரும்ப காலதாமதம் ஏற்படும் போது இருட்டில் தான் சமையல் செய்ய வேண்டும். இரவு நேரத்தில் யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்றவை பயிர்களை சேதப்படுத்தும்போது இருட்டில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது. இதனால் அறுவடை சமயத்தில் மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
பல தலைமுறைகளாக எங்களது மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். மூதாதையர் வாழ்ந்த நிலத்தை விட்டுச்செல்ல மனம் இல்லாததால், வசதி இல்லாமல் போனாலும், இங்கேயே வசித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில பொருளாளர் ராமசாமி கூறியதாவது: மல்லியம்மன் துர்கம் கிராமத்தில் இந்து மலையாளி கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அனைவரும் தங்கள் மூதாதையர்கள் 250 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்புகின்றனர். இந்த பகுதியில் உள்ள 14-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு விஜயநகரப் பேரரசின் கீழ் இருந்த கிராமம் என்பதை கூறுகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த பகுதி மக்கள் நிலையான குடியிருப்பு, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு இன்று வரை போராடி வருகின்றனர். மின்சாரம் இல்லாததால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இந்த கிராம மக்களுக்கு மின்சாரம் மற்றும் சாலை இணைப்பு என்ற இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றினாலே இடம்பெயர்வு குறைந்துவிடும்.
மேலும், இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளால் அச்சுறுத்தல் உள்ளது. இங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பான வீடு, பொதுக்கழிப்பிட வசதி இல்லை. வனத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு அரசின் சார்பில் நிலையான வீடு கட்டித்தர வேண்டும். கழிப்பிடம், நடைபாதை, தெருவிளக்கு போன்றவை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது: வன உரிமை சட்டத்தின்படி கடந்த மாதம் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டு, மின் இணைப்பு கோரி கிராம மக்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மூலம் வனத்துறை அனுமதிபெற்று, அதன்பிறகு மின்வாரியத்தை அணுகி இந்த கிராமத்திற்கு மின் இணைப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT